இயற்கையைத் தேடும் கண்கள் 24: அஞ்சல் கொத்திப் பறவை

இயற்கையைத் தேடும் கண்கள் 24: அஞ்சல் கொத்திப் பறவை
Updated on
1 min read

மரங்கொத்திகள்… உலகத்தில் சுமார் 150 விதமான மரங்கொத்திகள் உள்ளன. அவற்றில் ஏறத்தாழ 95 சதவீத மரங்கொத்திகள் மர வாழ் பறவைகள்.

மிகவும் கூர்மையான, வலுவான அலகுகளைக் கொண்ட இந்தப் பறவைகளுக்குப் பூச்சிகள்தான் முக்கியமான உணவு. அந்தப் பறவையின் நாக்கு நீளமாகவும், ஒருவிதமான பசைத் தன்மை கொண்டிருப்பதாலும் தன் அலகு செல்ல முடியாத மரப்பொந்துகளில், தன் நாக்கை நீட்டி, அங்குள்ள பூச்சிகளைப் பிடித்து உண்ணும்.

iyarkai-2jpg

பூச்சிகள் தவிர, பழங்கள், பருப்புகள், பூவிலிருக்கும் தேன் ஆகியவையும் இவற்றுக்கு விருப்பமான உணவு. மரத்தை இவை கொத்தும்போது ஏற்படும் ஒலியைத் தவிர, தன் இனத்தைச் சேர்ந்த இதர பறவைகளுடன் தொடர்புகொள்ள மரத்தைத் தன் அலகால் தட்டித் தட்டி ஒலி எழுப்பும். குறிப்பாக, இனப்பெருக்கக் காலத்தில் இணையை ஈர்ப்பதற்காக இவ்வாறு அது ஒலி எழுப்பும். ஆச்சரியம் என்னவென்றால், ஒரு நாளைக்கு 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் முறை, அவற்றால், மரத்தைத் தன் அலகால் தட்டித் தட்டி ஒலி எழுப்ப முடியும்!

தன் முட்டைகளை, ஏற்கெனவே உள்ள மரப்பொந்துகளிலோ அல்லது தானே உருவாக்கிய புதிய மரப்பொந்துகளிலோ இடும். பெரும்பாலும் குதித்துக் குதித்துத்தான் செல்லும். பறப்பது மிகவும் குறைவுதான்.

இந்தியாவில் பரவலாகக் காணப்படும் மரங்கொத்தி இனம், பொன்முதுகு மரங்கொத்தி (பிளாக் ரம்ப்டு ஃபிளேம்பேக் உட்பெக்கர் அல்லது லெஸ்ஸர் கோல்டன்பேக் உட்பெக்கர்). காடுகள், நகரங்கள் மட்டுமல்லாது, 4 அல்லது 5 ரூபாய் இந்திய அஞ்சல் தலைகளிலும், வங்கதேச அஞ்சல் தலைகளிலும் இது இடம்பிடித்துள்ளது.

எப்போதோ என் பயணம் ஒன்றில் அந்தப் பறவையை என் கேமராவில் பதிவு செய்தேன். அதுதான் இது!

கட்டுரையாளர்,காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in