கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா

கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா
Updated on
1 min read

பனைப் பாளையைச் சீவி பதப்படுத்தவும், மட்டைகளை வெட்டிச் சீர்செய்யவும் அரிவாள் பயன்படுகிறது. அரிவாள்கள் பனையேறிகளின் முக்கியப் பணிக் கருவி.  இதில் இரு வகை உண்டு. மட்டைகளைச் சீவும் பணிக்காகப் பயன்படுத்தப்படுவது மட்டையருவாள். பாளைகளைச் சீவும் பணிக்காகப் பயன்படுத்தப்படுவது பாளையருவாள்.

குறிப்பாகப் பனையேறும் தொழிலில்  பனையைச் சுத்தப்படுத்துவது அவசியமானது. அதாவது பழைய மட்டைகளை வெட்டித் தள்ளிவிட்டுத்தான் மேலேறிச் சென்று பதனீர் இறக்க இயலும். இந்த மட்டைகள் தாமே காய்ந்து விழுவதும் உண்டு. மட்டைகளையும் வேறு பொருட்களையும் வெட்டி அப்புறப்படுத்துகையில், மட்டையருவாளின் முனை சிதைய வாய்ப்பு உண்டு. 

ஆனால், பாளையருவாளின் முனை எவ்விதத்திலும் சிதையக் கூடாது. அது சீராக இருக்க வேண்டும், மழுங்கி விடக் கூடாது என்பதே வெற்றிகரமாகப் பதனீர் எடுக்க ஏற்ற வழி. அதனால் இருவிதமான பயன்பாட்டுக்கும் இருவிதமான அருவாள்கள்.

பாளையருவாள் செய்வதற்கெனத் தனியான கொல்லர்கள் இருக்கிறார்கள். வேம்பாரில் நாளைக்கு மூன்று அரிவாள்வரை செய்த கொல்லர் ஒருவரைப்  பார்த்திருக்கிறேன். தற்போது வருடத்துக்கு மூன்றுதான் செய்கிறார். பெரும்பாலும் பழைய அருவாளைப் புதுப்பிக்கும் பணிதான் அதிகமாக வருகிறதாம்.

கருங்கல் சந்தையில் இன்றும் விற்பனைக்குப் பாளையருவாள்கள் வருகின்றன. விலை சற்றேறக்குறைய 1,000 ரூபாய். பாளை அருவாள் சிறிதாகவும் மட்டையருவாள் பெரிதாகவும் கவிந்த பிறைபோலும் இருக்கும். காளியின் கரத்திலிருக்கும் ஒரு ஆயுதம் இவ்விதம் பிறை வடிவில்தான் இருக்கும். இந்த ஒற்றுமை தற்செயலானது அல்ல.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in