அவள் பெயர் காவிரி

அவள் பெயர் காவிரி
Updated on
1 min read

ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளைச் சொல்வதன் மூலமாக நாட்டின் தலையாய பிரச்சினையை மேடையில் பிரதிபலிக்கும் முயற்சியே கூத்துப்பட்டறை வழங்கிய `அவள் பெயர் காவேரி’ நாடகம்.

தமிழ், குடும்பத்தைக் கவனிக்காமல் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி, மனைவி, குழந்தையை அடித்துத் துன்புறுத்துகிறான். கணவன் திருந்துவான் என்று எல்லாவற்றையும் பொறுத்துப் பார்த்த காவேரி, ஒரு கட்டத்தில் அவளின் தாய் வீட்டுக்குச் சென்றுவிடுகிறாள். காவிரி இல்லாமல் வீட்டிலிருக்கும் செடி, கொடிகள் மட்டுமல்ல தமிழும் அவனுடைய மகனும்கூட வாடிவிடுகின்றனர். அன்பாகவும் அதட்டி உருட்டியும் எப்படிக் கூப்பிட்டாலும் தாய் வீட்டுக்குச் சென்ற காவேரியைத் திரும்ப புகுந்தவீட்டுக்கு அழைத்துவரத் தமிழால் முடியவில்லை.  ஊர்ப் பஞ்சாயத்து தலைவரின் உதவியை நாடுகிறார் தமிழ்.

ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையாக இல்லாமல், நதியைப் பற்றிய கதையாக, நாட்டைப் பற்றிய கதையாக, சம்பவங்கள் விரிகின்றன. காவேரி நதி நீர்ப் பங்கீடு குறித்து இரு மாநிலங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சினை, அதிக வெள்ளத்தில் கரைபுரண்டுவரும் காவிரி நீரையும் சேமிக்க வழியில்லாமல் தமிழ்நாட்டில் கடலில் கலப்பது, மழை வெள்ளத்திலும் கடைமடை விவசாயிகளுக்கு நீர் எட்டாத வகையில் நீர்வரும் பாதையைத் தூர்வாராமல் இருப்பது, மணல் கொள்ளை, விவசாயிகள் தற்கொலை, போராடும் விவசாயிகளுக்கு எதிராக போலீஸைவிட்டு அரசு எடுக்கும் நடவடிக்கை, துப்பாக்கிச் சூடு என அடுத்தடுத்து நாடகத்தில் அரங்கேறும் சம்பவங்களின் மூலம் காவிரி என்னும் நதியையே ஒரு பாத்திரமாக்கியிருக்கும் இயக்குநர் செல்லா செல்லத்தின் திறமையைப் பாராட்டலாம்.

தமிழ், பஞ்சாயத்து தலைவர், காவேரி ஆகிய பாத்திரங்களில்  நடித்தவர்கள் உட்பட நடிகர்கள் அனைவருமே அளவான நடிப்பை வெளிப்படுத்தினர்.காவேரியாக நடித்த ஷாரா மோனுவின் நடிப்பு அபாரம்.

நதியைவைத்து உங்கள் அரசியலை நடத்தாதீர்கள். நதி மனிதர்களுக்கான ஆதாரம். அரசியலுக்கானது அல்ல என்பதை உரத்துச் சொல்லும் இந்த நாடகத்தைப் பள்ளி, கல்லூரிகளிலும் நடத்துவதன் மூலம் நதிகள் தொடர்பான விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினரிடமும் அதிகரிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in