

பாய்ந்தும் எறிந்தும் படிந்தும் பலாகாலும்
காய்ந்தும் வாய்க்கொண்டுங் கடுஞ்சொல்லார்
ஆய்ந்து நிறங்கண்டு வித்தகர் நேர்விட்ட கோழிப் புறங்கண்டும் தான்
வருமே போர்க்கு
- என்ற புறப்பொருள் வெண்பாமாலை (348) வரிகள் உணர்த்துவது சண்டைச் சேவல்கள் தன்னுடைய கால்களில் முன் கொண்டு தாக்கியும் தாழ்ந்தும், சினந்தும், வாயால் கொத்தியும் போரிடுகிறது.
ஆய்ந்து நிறங்கண்டு வித்தகர் நேர்விட்ட கோழி என்பதுதான் இன்றுவரையிலும் நிறத்தின் அடிப்படையில் இனம் காணும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்திய அளவில் உள்ள சண்டைச் சேவல் இனங்களில் பொதுவான பெயர் Aseel அல்லது Asil.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக உலகம் முழுவதும் உள்ள சண்டைச் சேவல்களைப் பற்றிய ஆய்வில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டு உலக அளவிலான சண்டைச்சேவல் இனங்கள் பற்றி ஒரு நூலை எழுதிவரும் வில்லியம் வேன் பெல்கின்ஸ், மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழகச் சேவல் இனங்கள் குறித்தான தரவுகளுக்காக என்னுடன் பேசியபோது, “இந்திய இனங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. குறிப்பாக கி.பி.11-ம் நூற்றாண்டில் சுல்தானிய முகலாயர்களின் வருகைக்குப் பின் வட இந்தியாவில் சேவல் போர்கள் புத்துணர்வு பெற்றதை அறிய முடிந்தது. Asil என்ற சேவல் இனப் பெயர்கூட அவர்கள் மூலம் வந்த சொல்தான்” என்றார்.
தமிழகச் சேவல் வகையை மூன்று விதமாகப் பிரிக்கலாம்; வெற்போர் சேவல், கத்திகட்டுச் சேவல், வால் சேவல். இவற்றில் முதல் இரண்டும் சேவல் சண்டைக்காகவும் கடைசி வகை அழகுக்காகவும் வளர்க்கப்படுபவை.
இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்ப்பது அவசியம். இதற்கு முன்பு வெளியான முக்கியமான குறிப்புகளை அறிவதன் மூலம் ஒரு தெளிவான புரிதலை எட்டமுடியும்.
காரணம் இன்று நாம் சேவல்களுக்கு வழங்கும் பெயர்கள் நம்முடைய மூதாதையர்கள் வாய்வழியாகச் சூட்டப்பட்டு வந்தவைதாம். நம்முடைய சேவல் இனங்களைப் பற்றிய ஆய்வுகளை வரலாற்று ரீதியில் செய்தவர்கள் தமிழ்நிலம் சாராதவர்கள். எனவே, அவர்களுடைய தரவுகளில் நம்முடைய நிற அடிப்படையிலான பெயர்களை எதிர்பார்க்க முடியாது. அதுபோல அவர்களால் சூட்டப்பட்ட பெயர்களும் நமக்குப் பரிச்சயம் இல்லாதது. எனவே, நம்முடைய இனங்களை எப்படி எல்லாம் குறித்தனர் என்பதை அறிவது தெளிவான புரிதலுக்கு வழிவகுக்கும்.
ராம்பூர் நவாப் யார் முகமது கான், 1883-ல் சயட்-கன்-எ-ஷாகுட் (Sayd-gan-i shawkati) என்று உறுதிமொழி நூலின் ஒரு பகுதியான முர்ஹ் நாம், சேவல்களைப் பற்றி சிறப்பான முறையில் வந்த முதல் பதிவு. லெப்டினன்ட் கானல் டி.சி.திலாட் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
கட்டுரையாளர், வளர்ப்பு விலங்குகள் ஆய்வாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com