

‘நிலமும் வளமும்’ இணைப்பிதழில் வெளியான எழுத்தாளர் பாமயனின் ‘முன்னத்தி ஏர்’ கட்டுரைத் தொடர் அதே பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. ‘தமிழ் இந்து’வின் தமிழ் திசைப் பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது.
இயற்கை வேளாண்மையில் நீண்ட பாரம்பரியம் கொண்டது நம் மாநிலம். நாட்டுக்கே இயற்கை வேளாண்மை பாடம் எடுத்ததில் தமிழகத்துக்குத் தனி இடம் உண்டு. மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அளித்த உத்வேகத்தில் தமிழகத்தில் இயற்கை வேளாண்மை வீரியத்துடன் பரவியது. அதேநேரம் அவருக்கு முன்பாகவும் பின்பாகவும் பலர் இயற்கை வேளாண்மைக்கு உத்வேகம் அளித்து வந்திருக்கிறார்கள்.
அவர்களைப் போன்ற முன்னோடிகள் இட்ட பாதையில்தான் தமிழகம் இன்றைக்கு இயற்கை வேளாண்மையில் நடைபயின்று கொண்டிருக்கிறது. அந்தப் பாதையை உருவாக்குவதற்குத் தங்கள் அறிவையும் வாழ்க்கையையும் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். அந்த அரிய முயற்சிகளைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்த எழுதப்பட்டதே 'முன்னத்தி ஏர்' நூல்.
இந்த நூலை எழுதுவதற்கு மிகப் பொருத்தமானவர் களத்தில் இயற்கை வேளாண்மையைத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் உழவராகவும் மூத்த சூழலியல் எழுத்தாளராகவும் அறியப்பட்ட பாமயன். முன்னோடிகள் உருவாக்கித் தந்த இயற்கை வேளாண் நுட்பங்களை அறிமுகப்படுத்தியிருப்பது மட்டுமல்லாமல், அதற்காக அவர்கள் இட்ட கடும் உழைப்பையும் தியாகத்தையும் இந்த நூலில் விரிவாகப் பதிவுசெய்துள்ளார் அவர்.
'முன்னத்தி ஏர்' என்ற இந்தத் தொடர் ‘இந்து தமிழ்' நாளிதழில் ‘நிலமும் வளமும்’ இணைப்பிதழில் வெளியான காலத்திலேயே பரவலான வரவேற்பைப் பெற்றது. வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள ஆர்வமாக இருக்கும் இளைய தலைமுறைக்கு இது சிறந்த வழிகாட்டியாக அமையும். அத்துடன் காலம்காலமாக நமக்கு உணவு அளித்து வரும் உழவர்களின் அறிவியல் கண்டறிதல்களுக்கான சிறந்த சான்றாகவும் திகழும்.
முன்னத்தி ஏர் | ஆசிரியர்: பாமயன்
விலை: ரூ. 130
வெளியீடு: இந்து தமிழ் திசை, 124, கஸ்தூரி மையம், வாலாஜா சாலை, சென்னை -2
தொலைபேசி: 7401296562