

பனை மரம் ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது எனக் கூறுவார்கள். ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் எங்கெங்கு சென்றதோ அவ்விடங்களில் எல்லாம் ஆதி மனிதர்கள் பனை விதைகளை தங்களுடன் எடுத்துச் சென்றனர் எனச் சொல்லப்படுகிறது. ஏனென்றால், பனை மரங்கள் மக்கள் வாழும் பகுதிகளின் அருகிலேயே இருக்கிறது.
அடர் காடுகளில் பனை மரங்களை நாம் காண இயலாததற்கு மனிதனோடு பனை மரம் கொண்டுள்ள உறவே காரணம். இப்பயணம் ஒரே நாளில் நடைபெற்றதில்லை ஆகையால் இப்பயணத் திட்டத்தில் ஏற்பட்ட சவால்களும் படிப்பினைகளும் மிக முக்கியமானவை.
பாதையில் காணும் கல்லும் முள்ளும் சிறு பாதங்களைத் தீண்டாவண்ணம் இருக்கவே காலணிகளைக் கண்டுபிடித்திருப்பார்கள். தோல் காலணிகள் கி. மு. 8,000-ம் ஆண்டு முதலே பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது என்பது தொல்லியல் கண்டுபிடிப்பு.
பனை ஓலையில் செய்யப்பட்ட மிக அழகிய ஆதிகாலப் பயன்பாட்டுப் பொருள் காலணிதான். மொத்தம் நான்கே இலக்குகளில் இரு பகுதி காலணியையும் செய்துவிடலாம். தேவையைப் பொறுத்து பெரிதும் சிறிதுமான ஓலைகளைத் தெரிந்துகொண்டு பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் ஏற்ற காலணிகளைச் செய்யலாம்.
பனைமட்டையிலிருந்து அகணி (ஊட்புற) நார் எடுத்து அவற்றால் காலணியைக் கட்டிக்கொள்ளலாம். இத்தொன்மையான வடிவமைப்பு குமரி மாவட்டத்தில் வழக்கொழிந்து போய்விட்டது. நினைவுகளிலிருந்து மட்டுமே இன்று இவற்றை மீட்டெடுக்க இயலும்.
ஒரு காலகட்டத்தில் மண் சுமப்பவர்கள், சந்தைக்குப் பொருட்களைத் தலைச் சுமடாக எடுத்து வருபவர்கள் இதை அணிந்திருப்பார்கள். ஒரு நாள் பயணத்துக்குச் சரியாக இருக்கும், பிய்ந்து போய்விட்டதென்றால் மற்றொன்று செய்து போட்டுக் கொள்ளலாம்.
இச்செருப்பின் பயன்பாடு அறிய ஒருநாள் முழுவதும் இதை அணிந்து பயணித்தேன். இதமாக இருந்தது. மிக அடிப்படையான பின்னல் ஆகையால், நீர் உட்புகும் வண்ணமே இக்காலணி அமைக்கப்பட்டிருக்கிறது. அதே நாளில் இதே செருப்போடு இரு சக்கர வாகனத்தை இயக்கி 30 கிலோ மீட்டர் தடையின்றி பயணம் செய்யவும் முடிந்தது.
குளிர் காலங்களில் ரப்பர் செருப்புகளையோ பிளாஸ்டிக் செருப்புகளையோ பயன்படுத்துவதைத் தவிர்த்து இந்தப் பனைச் செருப்பு செருப்புகளைப் பயன்படுத்துவது கால்களுக்கு நல்ல பலனளிக்கும். மாதக்கணக்கில் வைத்து பயன்படுத்தலாம். இன்னும் ஒரு சுற்று ஓலைகளைக் கட்டிக்கொண்டால் மேலும் பல நாட்கள் உழைக்கும். இவ்விதச் செருப்புகள் காலைக் கடிப்பதில்லை.
இன்றும் திருநெல்வேலி ஏரல் பகுதிகளில் உள்ள குடும்பங்களில் நாட்டார் தெய்வங்களுக்கான நோன்புகள் கடைப்பிடிக்கும்போது, பனை ஓலையால் செய்யப்பட்ட இவ்விதச் செருப்புகளையே பயன்படுத்துவார்கள். இவ்விதச் செருப்புகள் நமது கலாச்சார அடையாளமாகச் சுற்றுலாத் தலங்களில் விற்கலாம். தற்போதைய செருப்புகளூக்கு மாற்றாகக்கூட இதைப் பயன்படுத்தலாம்.
குமரி மாவட்டத்திலுள்ள மிடாலக்காட்டைச் சார்ந்த அருணாச்சலம் (76) தனது இந்தப் பனை ஓலைச் செருப்பு செய்து தருகிறார். ஒரு ஜோடி செருப்பு செய்வதற்கு 60 ரூபாய் மாத்திரமே வாங்குகிறார். பயன்படுத்திதான் பார்க்கலாம்தான் இல்லையா
கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com