

பனையேறும் தொழிலில் ஈடுபட்டுவரும் சமூகம் தொன்மையானது; ஒரு நாடோடி சமூகம்போல் வாழ்க்கைமுறைகளைக் கொண்டது. இந்தச் சமூக மக்களின் வீடுகள் இந்த அம்சங்களைப் பறைசாற்றும். இந்த எளிமையான வீடுகளை மாற்றி, அரசே குடிசை மாற்றுத் திட்டங்கள் மூலம் நவீனக் கட்டுமான பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்துகிறது.
விடிலி என்பது குடிசை என்றுகூட பொருள் படாது. குடிசை என்றால் மண்ணும் பிற மரங்களும் அதன் கட்டுமானத்தில் இடம்பெற்றிருக்கும். விடிலி என்பது பனை ஓலைகளையும் மட்டைகளையும் பனந்தடிகளையும் கொண்டு கட்டப்படும் ஒரு எளிய கட்டுமானம். இது பனை ஏறுபவர்கள் தாங்கள் பணி செய்யும் இடத்தில் தங்குவதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படும் தாழ்ந்த அளவில் காணப்படும் வாழ்விடமும்கூட. இங்கேதான் காலையில் பதனீர் காய்ச்சுவார்கள். இரவில் உறங்குவார்கள். பனையேறிகள் தங்கள் அனைத்துத் தளவாடங்களையும் வைத்துக்கொள்ளும் ஒரு அறையாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.
முழுவதும் பனை சார்ந்த பொருட்களாலேயே கட்டப்படும் இவ்வீடுகளை நவீன வாழ்வு தனது வசதிகளைக் கருத்தில் கொண்டு தவறவிட்டுவிட்டது எனலாம். விடிலிதான் பனையேறிக்கு வீடு, பாதுகாப்புப் பெட்டகம், இளைப்பாறும் இடம், பணியறை, தளவாடங்கள் வைக்குமிடம் எல்லாம்.
எளிமையான இந்த தங்கும் கூடாரங்கள், இந்தச் சமூகத்தின் வாழ்வில் ஆற்றிய பங்களிப்புகள் சார்ந்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. விடிலி பொதுவாக பனந்தோப்பில் காணப்படும் உடை மரங்களுக்கு அருகில் அமைக்கப்படும். புதிதாகத் தொழில் தொடங்குவதற்கு முன்பதாக எப்படியாவது விடிலி ஒன்றைப் பனையேறிக் குடும்பம் அமைத்துக்கொள்ளும். விடிலிக்கும் குடிசைக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம், பனை ஓலைகளாலேயே விடிலியின் சுவர் பகுதியும் அமைக்கப்பட்டிருக்கும். இவ்வோலைகள் முடையப்படாமல் அப்படியே வைத்து சுவர் அமைக்கப்பட்டிருக்கும்.
விடிலியைச் சுற்றி பனையேறிகள் பயன்படுத்தும் மண்பாண்ட கலங்கள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை வெயிலில் காய்ந்தபடி கிடக்கும். ஆனால், அவர்கள் காய்சும் கருப்பட்டியும் கற்கண்டும் இந்தச் சிறிய பகுதிக்குள்ளேயே பரண் அமைக்கப்பட்டு கருத்துடன் பாதுகாக்கப்படும். ஒரு சமூகம் நவீன வாழ்வில், தன்னை எவ்விதம் குறுக்கி நமது வாழ்வின் இனிப்புச் சுவையை கொடுக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கையில் மலைப்புதான் ஏற்படுகிறது.
கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com