

பார்ப்பதற்கே ரொம்பக் கொடுமையானது பறவை வேட்டை. கண்ணியில் சிக்கிக்கொண்டு மலங்க மலங்க அவை விழிப்பதைப் பார்க்கச் சகிக்காது. சிறிது கறிக்காக ஒரு பறவையைக் கொல்கிறார்களே என்று மனம் பதறும். அதுவே கொல்லப்பட்டது தேசியப் பறவையான மயில் என்றால்?
மதுரை புறநகர்ப் பகுதியான கடச்சனேந்தல் கோல்டன் சிட்டி பகுதியில் கடந்த 4-ம் தேதி கொத்துக்கொத்தாக மயில்கள் செத்துக் கிடந்தன. சில உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. அந்தப் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர்கள் அதைக் காணச் சகியாமல், உடனே வனத்துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தார்கள். வந்து பார்த்த வனத்துறையினருக்கு அதிர்ச்சி. ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டும் 43 மயில் சடலங்கள் சிக்கின. அதில் 34 பெண் மயில்களும் அடக்கம்.
“9 ஆண் மயில்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவ்வளவுதான் இறந்தனவா, மேலும் சில ஆண் மயில்களை கொண்டுபோய்விட்டார்களா என விசாரிக்கிறோம். கொன்றது விவசாயிகளா அல்லது இறகுக்காக வேட்டையாடியவர்களா என்றும் விசாரிக்கிறோம்” என்றார்கள் வனத்துறையினர்.
“அங்கு சிதறிக் கிடந்த நெல்மணிகளைச் சோதித்துப் பார்த்தபோது, அதில் விஷம் கலந்திருப்பது உறுதியானது. மயில்களைக் கவர்வதற்காக, நெல் மணிகளை மணக்க மணக்க அவித்துப் போட்டிருக்கிறார்கள் என்று கருதுகிறோம். இருப்பினும் மயில்களின் உள்ளுறுப்புகளை மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம்” என்றும் அவர்கள் சொன்னார்கள்.
இதேபோல சமீபத்தில் சோழவந்தான், ராமநாதபுரம், கயத்தாறு, கோவை என்று தமிழகம் முழுக்கப் பரவலாக மயில்களை விஷம் வைத்துக்கொல்வது அதிகரித்திருக்கிறது. இத்தனைக்கும் வன உயிரினச் சட்டத்தின்படி மயில்களை வேட்டையாடுவது குற்றம். 3 முதல் 7ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை வழங்க சட்டத்தில் இடமுள்ளது. பிறகேன் இப்படி நடந்துகொள்கிறார்கள்?
“மயில்கள் கட்டுக்கடங்காமல் பெருகிவிட்டன. ஒருகாலத்தில் மலையடிவாரங்களிலும் கோயில்களிலும் மட்டுமே காணக் கிடைத்த மயில்கள் இப்போது காகங்களைப் போல நகரங்களில் கூட கூட்டமாகத் திரிகின்றன” என்கிறார்கள் விவசாயிகள்.
மேலும் அவர்கள் கூறும்போது, “நாங்கள் எதை விதைத்தாலும் விதைகளைப் பொறுக்கி எடுத்துவிடுகின்றன. விளையும் தருவாயில் மகசூலையும் பாதிக்கின்றன. ஒரு ஏக்கரில் விதைத்த நெல், கடலையைத் தின்று தீர்ப்பதற்கு நான்கு மயில்களே போதும். ஆனால், டஜன் கணக்கில் வருகின்றன. முன்பெல்லாம் விவசாயிகளே, தங்கள் தோட்டங்களை அழிக்கிற விலங்குகளையும் பறவைகளையும் கண்ணி வைத்துப் பிடிப்பது வழக்கமாக இருந்தது. அதேபோல மயில் எண்ணெய்க்காக மயில்களைக் குறவர் சமூகத்தின் வேட்டையாடி விற்றார்கள். எல்லாவற்றையும் வனத்துறையினர் தடை செய்துவிட்டதுதான் பிரச்சினைக்குக் காரணம்” என்கிறார்கள்.
இதுகுறித்து பறவை ஆர்வலர் ரவீந்திரன் கூறும்போது “தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சுத்தமாக நரியே இல்லை. அதேபோல காட்டுப்பூனைகள் மற்றும் கீரிகளின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துவிட்டது. இவை வாழ்வதற்கான புதர்களை, சீமைக்கருவேல மரங்களை அகற்றுகிறோம் என்ற போர்வையில் வெட்டித்தள்ளிவிட்டார்கள்.
கீரி, நரி, காட்டுப்பூனைகள் இருந்திருந்தால் மயில் முட்டைகளையும் குஞ்சுகளையும் சாப்பிட்டு இயற்கையாகவே அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருந்திருக்கும். மயில்களை வேட்டையாட அனுமதிக்கலாம் என்ற கோரிக்கையே அபத்தமானது. ஏற்கெனவே நரி உள்ளிட்ட விலங்குகளை அழித்ததற்கான விளைவைத்தான் இப்போது அனுபவித்து வருகிறோம். மயில்களை அழித்தால் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்பது 20 ஆண்டுகள் கழித்துத்தான் தெரியும்.
முதலில் தன்னைச் சுற்றியுள்ள விலங்குகள், பறவைகள் எல்லாமே தனக்கு எதிரிகள் என்ற மனநிலையிலிருந்து மனிதர்கள் வெளிவர வேண்டும். உணவுச் சங்கிலி பற்றியும், ஒன்றைச் சார்ந்துதான் மற்றொரு உயிர் இருக்கிறது என்பது பற்றியும் கிராம மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அனைத்து உயிர்களையும் பேண வேண்டிய அவசியம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்கிறார்.
தேசிய பறவை சேதமாகாமல் காப்போம்!
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி