Published : 11 Aug 2018 12:35 pm

Updated : 11 Aug 2018 12:35 pm

 

Published : 11 Aug 2018 12:35 PM
Last Updated : 11 Aug 2018 12:35 PM

மலரே, குறிஞ்சி மலரே...

நீலக் குறிஞ்சி பூக்கத் தொடங்கிவிட்டது!

மக்களின் கண்களுக்கு


விருந்தளிக்கத் தொடங்கிவிட்டது!

மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதிக்கே உரித்தான இந்த மலர், இந்த ஆண்டு ஜூலை மாத மத்தியில் பூக்கத் தொடங்கியது. இந்தப் பூத்தல் நிகழ்வு செப்டம்பர் மாதக் கடைசிவரை தொடர வாய்ப்புள்ளது. கோடைக்கானல் பகுதி தொடங்கி ஆனைமலை, உதகை, மூணாறு, இடுக்கிவரை உள்ள மலைப்பகுதிகளில் குறிஞ்சி மலர்ப் போர்வைகளை வெளிபடத் தொடங்கிவிட்டன. தமிழக, கர்நாடக, கேரள மக்கள் இந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண்பதற்கு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு ஏற்கெனவே படையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

குறிஞ்சி பூத்தல் நிகழ்வில் அப்படி என்ன சிறப்பு? உலகிலுள்ள பூக்கும் தாவரங்களில் ஒரு சில மட்டுமே ஒவ்வோர் ஆண்டும் பூக்காமல், அவற்றின் வாழ்நாளின் முடிவில் ஒரே முறை பூத்து, காய்த்து, இறக்கும் தன்மையுடையன. இதை ஆங்கிலத்தில் semelparous அல்லது monocarpic என்றழைக்கிறார்கள். இத்தகைய தாவரங்களில் ஒன்று குறிஞ்சி.

வாழ்நாளில் ஒரே முறை பூக்கும் தாவரங்களிலும் அனைத்து உறுப்பினத் தாவரங்களும் ஒரே காலகட்டத்தில் ஒன்றாகப் பூக்கும் நிகழ்வைக் கொண்டவை மிக அரிது. இதை ஒருமித்தப் பூத்தல் (mast flowering) என்பார்கள். இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு நீலக் குறிஞ்சி. இது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கிறது. எனவே, ஒரே முறை பூத்தல், ஒருமித்த பூத்தல் ஆகிய பண்புகளை ஒருங்கே கொண்டது நீலக்குறிஞ்சியின் தனிச்சிறப்பு.

முதல் அறிவியல் பதிவு

குறிஞ்சி பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்கும். அதுவும் ஒருமித்துப் பூக்கும் என்பதைப் பண்டைய தமிழர் அறிந்திருந்தனர். தமிழ்ப் பழங்குடிகளில் இன்றும் நிலைத்து வாழும் பழங்குடி இனங்களில் ஒன்றான பளியர் இன மக்கள், அவர்களுடைய வயதை குறிஞ்சி பூத்த ஆண்டை மனத்தில்கொண்டே கணக்கிட்டு கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

என்றாலும், வரலாற்றின் இடைக்காலத்திலும் (Middle Ages), பிரிட்டிஷ் காலனி ஆதிக்கக் காலம் வரையிலும் நீலக்குறிஞ்சியின் பூத்தல் பற்றிய சரியான தரவுகள் பதிவு செய்யப்படவில்லை. பிரிட்டிஷ் மக்கள் நீலகிரியில் 1820-களில் குடியேறத் தொடங்கினர். குறிஞ்சி பற்றிய இவர்களுடைய முதல் பதிவு 1826-ம் ஆண்டில் செய்யப்பட்டது. அந்த ஆண்டு குறிஞ்சி ஒருமித்துப் பூத்ததை

1935-ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு அறிவியல் ஆய்வுக் கட்டுரையில் (Journal of the Bombay Natural History Society) எம்.இ. ராபின்சன் என்பவர் சான்றுகளுடன் எடுத்துக்காட்டியுள்ளார். இதேபோன்று அடுத்தடுத்த 12-வது ஆண்டுகளும் 1934 வரை (1850, 1862, 1874, 1886, 1898,1910, 1922, 1934) குறிஞ்சியின் ஒருமித்தப் பூத்தல் நடைபெற்றதை ராபின்சன் பதிவுசெய்துள்ளார்.

1934-ம் ஆண்டு பழனி / ஆனைமலைப் பகுதிகளில் அவர் நேரில் கண்ட குறிஞ்சிப் பூத்தல் நிகழ்வை விவரித்துள்ளார். 1934-ம் ஆண்டு முதல் இன்றுவரை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்தல் தொடர்ந்து காணப்பட்டு வந்துள்ளது (1946, 1958, 1970, 1982, 1994, 2006, 2018).

kurinji 3jpg

பண்டைய பதிவுகள்

குறிஞ்சித் தாவரம் / பூ பற்றிய குறிப்புகள் பழந் தமிழிலக்கியத்தில் காணப்படுகின்றன. தொல்காப்பியத்தில் நான்கு திணைகளில் ஒன்றாகவும் ("முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே" - தொல்காப்பியம் பொருள்: 5), சங்க இலக்கியத்தின் ஐந்து திணைகளில் ஒன்றாகவும் கருதப்பட்ட குறிஞ்சித் திணையின் முதற் பொருளாக மலையும் மலை சார்ந்த இடமும், முக்கியக் கருப்பொருட்களாக குறிஞ்சித் தாவரமும் கடவுளாக சேயோனும் (முருகனும்) உணவாகத் தேனும் தினையும், உரிப்பொருளாக புணர்ச்சி ஒழுக்கமும் கருதப்பட்டன.

இவற்றின் காரணமாக குறிஞ்சிக்கும் குறிஞ்சித் திணைக்கும் பண்டைய தமிழர் ஒரு பண்பாட்டு மதிப்பை (cultural value) கொடுத்தனர். குறிஞ்சி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பதால், குறிஞ்சியின் உரிப்பொருளை மனதிற்கொண்டு, 12 வயதுப் பெண்கள் திருமணத்துக்கு ஏற்ற வயதினர் என்று பண்டைய தமிழர் கருதினர். மேலும் குறிஞ்சிப் பூவின் கருநீல நிறம் மறையொழுக்கத்தின் குறியீடாகவும் குறிஞ்சிப் பூவின் தேன் களவின்ப மிகுதிக் குறியீடாகவும் அவர்களால் கருதப்பட்டது.

தேன் தொடர்பு

குறிஞ்சித் தேனைப் பற்றி இங்கு குறிப்பிட வேண்டும். குறிஞ்சி ஒருமித்துப் பூக்கும் காலத்தில் தேனீக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும். தற்போதைய ஆய்வின்படி ஒரு குறிஞ்சித் தாவரத்தின் சராசரியாக 82 மஞ்சரிகளும் ஒவ்வொரு மஞ்சரியிலும் சராசரியாக 24 பூக்களும் (அதாவது, ஒரு தாவரத்தில் சராசரியாக 1,768 பூக்கள்), ஒவ்வொரு பூவிலும் ஏறத்தாழ 4 மி.லி. தேனும் (அதாவது ஒரு தாவரத்துக்கு 7,072 மி.லி. அல்லது 0.007 லிட்டர் தேன்) உருவாக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது.

எனவே, குறிஞ்சி பூக்கும் காலத்தில் தேன் உற்பத்தி மிகவும் அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே குறிஞ்சி நில மக்களின் முக்கிய உணவாகத் தேனும் (தினையோடுகூடியது), முக்கியத் தொழிலாக தேன் சேகரித்தலும் இருந்ததாக பண்டைய தமிழ் இலக்கியம் கூறுகிறது ("கருங்கோற் குறிஞ்சி பூக் கொண்டு, பெருந்தேன் இழைக்கும் நாடன்" - குறுந்தொகை - 8).

இது தொடர்பாக மேற்கத்திய மலைத் தொடர் பகுதிகளில் குடியேறிய ஐரோப்பியர்களின் கண்டுபிடிப்பு சுவாரசியமானது. குறிஞ்சி பூக்கும் காலத்தில் தேனீக்களின் படை மிகவும் அதிகமானதாகவும், 1922-ம் ஆண்டில் (ஒருமித்த குறிஞ்சிப் பூத்தல் காணப்பட்ட ஆண்டு) ஏறத்தாழ 28 தேன் கூடுகள் ஒரே ஒரு யூகலிப்டஸ் மரத்தில் தொங்கிக் காணப்பட்டதாகவும் அதற்கு அருகில் இருந்த பாறையில் 28 தேன் கூடுகள் காணப்பட்டதாகவும் ராபின்சன் குறிப்பிட்டுள்ளார்.

குறிஞ்சிக் குழப்பங்கள்

குறிஞ்சி, ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானஸ் என்ற தாவரப் பெயரைக் கொண்டது. உலகில் ஏறத்தாழ 360 ஸ்ட்ரோபிலாந்தஸ் சிற்றினங்கள் காணப்படுகின்றன; இவற்றில் ஏறத்தாழ 150 சிற்றினங்கள் இந்தியாவில் காணப்படுவதாகவும் 60 சிற்றினங்கள் இந்திய தீபகற்பப் பகுதியில் காணப்படுவதாகவும், இவற்றில் 47 மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவை பெரும்பாலும் 1,300 முதல் 2,400 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன. இந்தியச் சிற்றினங்களின் பூக்கும் கால இடைவெளிகள் சிற்றினங்களுக்கேற்ப 1 முதல் 16 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையில் குறிஞ்சியோடு காணப்படும் சில சிற்றினங்களில் இந்த கால இடைவெளி எட்டு அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளது என்பதாலும், இவற்றின் பூக்களின் நிறமும் நீலமாக இருப்பதாலும் குறிஞ்சிப் பூத்தலோடு இவை குழப்பிக்கொள்ளப்படுகின்றன.

தமிழிலக்கியக் குறிஞ்சி 1,300 முதல் 2,500 மீட்டர் உயரமுள்ள இடங்களில் வளரக் கூடியது; புதரை ஒத்த வளரியல்பைக் கொண்ட இது, பொதுவாக 30 முதல் 60 செ.மீ. உயரம்வரை வளரக் கூடியது; புனல் வடிவ நீல / அடர்நீல நிற பூக்களைக் கொண்டது; ("கருங்கோல் குறிஞ்சி மதன் இல் வான் பூ" - நற்றிணை 268:3:3. இங்கு மதன் - வலுவான கருமை நிற பூத்தண்டு; வான்பூ - வானத்தை ஒத்த நீலநிறப்பூ); மகரந்தச் சேர்க்கை அடைந்த பின் பூவின் நிறம் மாறக்கூடியது.

விடியலில் அது பூக்கும் என்று சங்க இலக்கியச் செய்தி கூறுவதை தற்போதைய ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன; காலை ஐந்து முதல் ஒன்பது மணிவரை பூ மலரும். மகரந்தச் சேர்க்கை அடுத்த மூன்று மணி நேரத்துக்குள் நடைபெற்றுவிடும்; ஒவ்வொரு பூவும் 3-4 விதைகளை உருவாக்கும் எனவே, விதையும் மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

எதிர்காலத்தில் தப்பிக்குமா?

ஒரு காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதிகளில் காணப்பட்டு பெருமளவு பூத்த நீலக் குறிஞ்சி (இதன் காரணமாகவே, நீலகிரி என்ற பெயர் ஏற்பட்டது) பல்வேறு காரணங்களால், குறிப்பாக மனிதர் ஏற்படுத்திய சூழலியல் மாற்றங்களால், அதன் விரவல் பரப்பில் பெருமளவு சுருங்கிவிட்டது. யூகலிப்டஸ், சீகை (வேட்டில்) போன்ற அயல் மரங்களின் நுழைப்பும், காய்கறி பழத் தோட்டங்களின் ஆக்கிரமிப்பும் குறிஞ்சி நில இழப்புக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.

எடுத்துக்காட்டாக, 30 ஆண்டுகளுக்கு முன்பாகக்கூட கோடைக்கானல் பகுதியில் பாம்பாறு ஆற்றுக்கும் வட்டக்கனல் பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் (குறிப்பாக, கோக்கர்ஸ் வாக் பகுதிக்கு கீழே) நன்கு பரவிக் காணப்பட்ட குறிஞ்சியின் விரவல், தற்போது பெரிதும் சுருங்கிவிட்டது. இது மேலும் சுருங்காமல் இருக்க, இந்த இடத்தை குறிஞ்சிப் பேணலிடமாக அறிவிக்கக் கோரி 2004-ம் ஆண்டிலேயே கோரிக்கை விடுக்கப்பட்டது.

kurinji 2jpg- பேராசிரியர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி, ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர் தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.inright

இந்தக் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. குறிஞ்சி விதைகளை உணவாக உண்ணும் காட்டுக் கோழியின் (இதுவே வளர்ப்புக் கோழியின் முன்னோடியாகக் கருதப்படுகிறது) எண்ணிக்கையும் அதிக அளவில் குறைந்துள்ளது என்பது வருத்தத்துக்குரிய செய்தி.

அதேநேரம், இந்த ஆண்டில் (2018) குறிஞ்சியின் ஒருமித்தப் பூத்தலைக் காணும்போது என்னுடைய காதுகளில் சங்க காலத்து குறிஞ்சி நில மக்களின் குறிஞ்சிப் பண்ணும், குறிஞ்சியாழ், குறிஞ்சிப் பறைகளான தொண்டகப் பறை, வெறியாட்டுப் பறை போன்றவற்றின் ஓசையும் ரீங்காரம் இடுவது போன்ற ஒரு புத்துணர்வு ஏற்படுகிறது.

எதிர்கால ஆர்வலர்களிடமும் இந்த உணர்வு தொடரும் என்று நம்புவோம்.

 குறிஞ்சிப் பூ மேற்குத் தொடர்ச்சி மலை குறிஞ்சி மலர்குறிஞ்சி பூத்தல் Semelparous Monocarpic Mast flowering

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

weekly-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x