எலத்தூர் குளத்தின் நீர் வழித்தடத்தில் குப்பையை அகற்ற கோரிக்கை

எலத்தூர் குளத்தின் நீர் வழித்தடத்தில் குப்பையை அகற்ற கோரிக்கை
Updated on
2 min read

693 வகையான உயிரினங்கள் வாழும் எலத்தூர் குளத்திற்கு, தெற்கே நம்பியூர் பகுதிகளில் உள்ள 21 சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து இரண்டு ஓடைகள் வழியே நீர் வந்து, நம்பியூர் கொன்னமடை பாலம் அருகே ஒன்றிணைந்து ஒரு பெரும் ஓடை வழியாக வந்தடைகிறது.

இரண்டு ஓடைகள் பெரும் ஓடையாக ஒன்றிணையும் இடத்தில் உள்ள நீர்வழித்தடத்தை ஒட்டி (நம்பியூர் தீயணைப்பு நிலையம் அருகே) தொடர்ந்து அதிகளவில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பை நீர்வழிப்பாதை உள்ளேயும் சரிந்து விழுந்துள்ளது.

நம்பியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட செட்டியம்பதி பகுதியில் இருக்கும் நம்பியூர் குளம் நிறைந்து, மிகை நீர் எலத்தூர் குளம் நோக்கி வரும் நீர்வழித் தடமே இந்த இடம். கனமழையால் நம்பியூர் குளம் நிறைந்தால், அதன் மிகைநீர் இந்தக் குப்பை அனைத்தையும் உயிர்ப்பன்மை மரபுத் தலமான எலத்தூர் குளத்திற்கு அடித்து வரக்கூடிய அபாயம் உள்ளது. தற்போது அவினாசி அத்திக்கடவு திட்டத்தின் மூலம் பவானி ஆற்றின் நீர் நம்பியூர் குளத்திற்கு வந்து கொண்டிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

17634668083085
17634668083085

ஏற்கெனவே 2024 மே மாதம் ஏற்பட்ட கனமழையின்போது நம்பியூர் குளம் நிரம்பி ஏற்பட்ட வெள்ளத்தில், இது போன்று நீர்வழிப்பாதைகளை ஒட்டிக் கொட்டியிருந்த அனைத்து குப்பையும் எலத்தூர் குளத்திற்கு அடித்து வரப்பட்டது. பிறகு பலரின் பங்களிப்பில் சிரமப்பட்டு அகற்றப்பட்டது. இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருக்க உடனடியாக எலத்தூர் குளத்தின் நீர் வழித்தடங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பை அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும். அகற்றப்படும் குப்பை தரம் பிரித்து அரசின் வழிகாட்டுதல்படி முறையாகக் கையாளப்பட வேண்டும்.

நீர்வழித்தடங்கள் புல்வெளி, மணல்மேடுகள், பாறைப் பாங்கான பகுதி, புதர், கரை என உயிர்ச்சூழல் நிறைந்து வாழும் பல்வேறு வாழ்விடங்களை உள்ளடக்கியது. நீர்நிலைகள்‌, நீர்நிலைப் பாதைகளில் குப்பை கொட்டுவது சட்டவிரோதச் செயல். இந்தச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். நம்பியூர் பேரூராட்சி நிர்வாகம் குப்பையை நீர்வழிப்பாதைகளை ஒட்டிக் கொட்டுவதை நிறுத்தி, முறையான திட்டமிடலுடன் குப்பையைக் கையாளவேண்டும்.

மேலும், அந்தப் பகுதியில் மீண்டும் குப்பை கொட்டப்படுவதைத் தடுக்க, எச்சரிக்கைப் பலகை வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய அளவில் முக்கியப் பறவைகள் வாழ்விடங்களில் ஒன்றான எலத்தூர் குளத்தில், நீர்வழிப் பாதையில் இது போன்று வேறு எங்காவது குப்பை கொட்டப்பட்டுள்ளதா என நம்பியூர் / எலத்தூர் பேரூராட்சி உடனடியாக ஆய்வு செய்து, அவற்றையும் அகற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in