

மண்ணை வளப்படுத்தும் பேருயிர்களில் சாண வண்டு என்று அழைக்கப்படும் கருவண்டுகள் மிகவும் முக்கியமானவை. இவை மண் வளம் காக்கும் பணிகளில் மட்டுமல்லாது, விலங்குகளின் மலத்தை, சாணத்தை மண்ணுக்குள் புதைத்துத் துப்புரவுத் தொழிலாளியாகவும் பணியாற்றுகின்றன. ஆப்பிரிக்கா முதல் அண்டார்டிகா வரையும் இவை வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றில் 8,600 வகையினங்கள் இருப்தாகக் கண்டறியப்பட்டுள்ளன.
மம்மி என்ற ஆங்கிலத் திரைப்படத்தை நம்மில் பலர் பார்த்திருக்கக் கூடும். அதில் ஒருவரைப் படையெடுத்துத் தாக்கும் ஒரு கொடுமையான பூச்சியாக இதைச் சித்தரித்திருப்பார்கள். இது ஒருவகையில் அவர்களின் முட்டாள்தனத்தையே காட்டுவதாக உள்ளது. உண்மையில் மனிதர்களைச் சாண வண்டுகள் உண்பதில்லை. உண்மையில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே எகிப்தியர்கள் சாண வண்டுகளை மிகவும் உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றினர். அவர்களது கடவுள்களில் ஒருவரான கெப்ரியின் தலை சாண வண்டின் வடிவத்திலிருக்கும்.
இவர் சூரியக் கட்வுள். கதிரவன் எப்படிக் காலையில் தோன்றி மலையில் மறைந்து மீண்டும் காலையில் தோன்றுவதுபோலத் தெரிகிறதோ அப்படிச் சாண வண்டுகளும், பகலில் பணிசெய்து இரவில் மண்ணுக்குள் புதைவதால் அதை அந்தக் கடவுளுடன் ஒப்பிட்டுள்ளனர். அதாவது பிறப்பின் தோற்றமும் மறைவும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்ற மெய்யியலை உணர்த்தும் ஓர் அடையாளச் சின்னமாக அவர்கள் கருதினர்.
இது ஒருபுறம் இருக்கச் சாண வண்டுகள் விலங்கின் கழிவை மறுசுழற்சி செய்யும் மாண்புறு பணியில் இடைவிடாது செயல்படுகின்றன. நாளொன்றுக்கு ஒரு வண்டு தனது உடையைப் போல 250 மடங்கு அதிகமான சாணத்தை அல்லது மலத்தை மண்ணுக்குள் அனுப்புகின்றன. இவை தனது எடையைப் போல 50 மடங்கு கனமான எடையைச் சுமந்து செல்லும் திறனைக் கொண்டுள்ளன. ஆஸ்திரேலியா நாடு தனது நாட்டில் உள்ள கால்நடைக் கழிவை அகற்ற 45 வகையான சாண வண்டுகளை இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம் சாண வண்டுகளின் சிறப்பைத் தெரிந்துகொள்ளலாம்.
கதிரவனின் வெளிச்சம் மட்டுமல்லாது நிலாவின் வெளிச்சம் கொண்டும், அமாவாசை எனப்படும் மறைநிலாக் காலங்களில் பால்வெளியில் இருந்து கிடைக்கும் ஒளியைக் கொண்டும் சாண வண்டுகள் தங்களது பணியைச் செய்யும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதாவது பால்வெளி ஒளியைப் பயன்படுத்தும் ஒரே பூச்சியினம் இவைதாம்.
ஆனால், நாமோ நஞ்சுகளைக் கொட்டி அவற்றை அழித்துவிட்டு மலம் அள்ள மனிதர்களைப் பயன்படுத்தும் அவலத்தைப் பின்பற்றுகிறோம். திறந்த வெளி மலம் கழிப்பு என்பதை மிகவும் கேவலமாகச் சித்தரிக்கும் நமது அரசுகள் ‘செப்டிக் டேங்க்’ என்ற மலக்கிடங்குகள் நிலத்தடி நீரை எவ்வளவு அதிகமாகக் கெடுத்திருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதில்லை.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com