

முயல் வளர்ப்பு தற்போது தமிழக பண்ணையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறைந்த முதலீடு மற்றும்
குறைந்த இடவசதி இருப்பவர்களுக்குக் கூட சாதகமான தொழில் என்பதே இதற்குக் காரணம். ஒரு முயலுக்கு இரண்டு சதுர அடி இடம் இருந்தால் போதுமானது. எனவே வீட்டின் கொல்லைப்புறத்திலோ, மாடியிலோ கூட, வீட்டுப் பெண்களால் ஒரு முயல் பண்ணையைப் பராமரிக்க முடியும். ஆகவே, முயல் வளர்ப்பு சிறந்த பண்ணைத் தொழிலாகக் கருதப்படுகிறது.
வீட்டில் கிடைக்கும் காய்கறிக் கழிவுகள், பசும்புற்கள் ஆகியவற்றை தீவனமாக அளித்து முயல்களை வளர்க்கலாம். எனினும், இந்த முறையில் வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும். ஆகவே, கடைகளில் கிடைக்கும் முயல்களுக்கான பிரத்தியேகத் தீவனங்களை அளித்தால் நல்ல வளர்ச்சி கிடைக்கும். மூன்று மாத காலத்துக்குள் இரண்டு கிலோ அளவுக்கு வளரும். இரண்டு கிலோ உடல் எடையை அடைந்தவுடன் இறைச்சிக்காக விற்கலாம். கோழிகள், பன்றிகளுக்கு அடுத்தபடியாக முயல்கள் அதிக இனவிருத்திதிறன் கொண்டவை.