

அது ஓர் ஆண்டு இறுதி. கேரளத்தின் வயநாடு செல்வதற்காக கர்நாடகத்தின் பந்திப்பூர் காட்டின் வழியாகச் செல்லும் சாலையில் பயணித்துக்கொண்டிருந்தோம். காடு சற்று வறண்டே காணப்பட்டது. காட்டுப் பாதைக்குள் வாகனத்தில் செல்லும்போது யாரும் கீழிறங்கக் கூடாது என்பது விதிமுறை. பகல் நேரத்தில் காட்டுயிர்களை, அதுவும் மனிதர்கள் விரைந்து செல்லும் சாலைக்கு அருகே பார்ப்பது அரிதுதான்.
வாகனச் சத்தத்தைத் தவிர, நிசப்தமாக இருந்தது காடு. காட்டை ஊடறுத்துச் செல்லும் அந்தப் பாதையில் கண்ணில் பட்டவை எல்லாம் மரங்கள், மரங்கள், மரங்களே. அரிதாகச் சில திருப்பங்களில் அல்லது சற்று உயரமான பகுதிகளில் பளிச்சென்ற சிவப்பு வண்ண மலர்களுடன் தோன்றிய மரங்கள் எங்களை ஈர்த்தன. காட்டுத்தீ என்கிற பொருளைக் கொண்ட ‘ஃபிளேம் ஆஃப் தி ஃபாரஸ்ட் மரம்’ இதுதான் என்று உடன் பயணித்தவர்களிடம் சொன்னேன்.