

நரி என்கிற சொல்லைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது அது தந்திரமானது, வஞ்சகம் செய்யக்கூடியது. இது மிகவும் தவறான புரிதல், கதைகள் வழி பரப்பப்பட்ட அறிவியலுக்கு முரணான கருத்து. தமிழ்நாட்டில் இரண்டு வகை நரிகள் உள்ளன. ஒன்று நரி (Golden Jackal), மற்றது குள்ளநரி (Indian Fox -Vulpes bengalensis). குள்ளநரிகள் உருவத்தில் சிறியவை. இவை வளை தோண்டி வாழும் இயல்புடையவை என்பதால், சில பகுதிகளில் குழிநரி, வங்குநரி (வங்கு என்பது வளை) என்றும் அழைக்கப்படுகிறது.
மலை அடிவாரங்கள், குறுங்காடுகள், புல்வெளிக் காடுகள், வேளாண் பாசன வாய்க்கால் கரையில் உள்ள அடர்ந்த புதர்கள் ஆகிய இடங்களில் குள்ளநரிகள் வளை தோண்டி வாழ்ந்துவருகின்றன. மக்கள்தொகைப் பெருக்கம், நகரமயமாதல், தொழிற்சாலை விரிவாக்கம், சாலை அமைத்தல் போன்ற மனித நடவடிக்கைகளால் இதன் வாழ்விடம் அழிக்கப்பட்டுவருகிறது.