

மரத்தோட்டம் ஒன்றை உருவாக்கும் நோக்குடன் சத்தியமங்கலத்தில் குடியேறி இருபத்திரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. நாங்கள் இந்த இடத்தை வாங்கியபோது இது வெறும் கட்டாந்தரை. நிலத்தைச் சுற்றிலும் கம்பிவேலி கட்டி, காட்டுக்குள்ளே மழைநீர் இறங்குவதற்குக் குழிகளைத் தோண்டினோம். சிறு குழிகளில் மரக்கன்றுகளை நட்டோம்.
காட்டில் பசுமை மலரத் தொடங்கிய பின் பல்லுயிர்களும் வரத் தொடங்கின. இதுவரை இக்காட்டில் நூறு வகைப் பறவைகளுக்கு மேல் பார்த்தாயிற்று. அதிகாலையில் குரல் கொடுத்து எங்களை எழுப்புவது கரிக்குருவி. மாலையில் இருட்டத் தொடங்கிய பின்னும்கூட அது அருகில் சுற்றிக்கொண்டிருக்கும். காலையிலும் சீக்கிரம் விழித்துவிடுகிறது.