

நமக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்வதுபோல, ஒரு நிலத்தின் மண் வளத்தைப் பற்றி அறிந்துகொள்ள மண் பரிசோதனை மிகவும் அவசியம். உரங்களை நிலத்தில் தெளிக்கும்போது நீரில் கரைந்த பிறகே அந்த உரங்களைப் பயிர்கள் எடுத்துக் கொள்ளும். எவ்வளவு உரத்தைப் பயிர்கள் எடுத்தக் கொள்ளும் என்பது அந்த மண்ணின் அமில மற்றும் காரத்தன்மையைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிறது. மண்ணின் அமிலத்தன்மை மற்றும் காரத் தன்மையின் அளவு, அந்த மண்ணில் இருக்கும் அங்கக கரிமங்களின் அளவைப் பொறுத்து அமைகிறது.
நமது மண்ணின் அமிலத்தன்மை, காரத்தன்மை மற்றும் அங்கக கரிமங்களின் அளவை தெரிந்துகொள்ள மண் பரிசோதனை உதவுகிறது. மேலும், பயிரின்வளர்ச்சிக்குத் தேவைப்படும் தழை (N), மணி (P), சாம்பல் (K) ஆகிய பேரூட்டச்சத்துக்கள் மற்றும் கந்தகச் சத்து ஆகியவையும், இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, போரான், தாமிரம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்களும் நமது மண்ணில் எவ்வளவு இருக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும். இந்த விவரங்களின் அடிப்படையில் நமது நிலத்துக்கான மண் வள அட்டை, மண் பரிசோதனை நிலையங்களில் இருந்து வழங்கப்படும்.