

சென்னையில், இயற்கை வேளாண்மை குறித்து, விழிப்புணர்வூட்டி வரும் மிக முக்கியமான அமைப்புகளில் ஒன்று ‘நல்ல கீரை’. அந்த அமைப்பு கடந்த 11, 12-ம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் ‘நல்ல சந்தை’ எனும் நிகழ்வு ஒன்றை நடத்தியது.
இயற்கை வேளாண் முறையில் விளைந்த உணவுப் பொருட்களின் கண்காட்சியுடன், சிந்தனையைப் பண்படுத்தும் உரைவீச்சும் அந்த இரண்டு நாட்களில் நடைபெற்றன. காய்கறிகள், பழங்கள் மட்டுமல்லாது, பாரம்பரிய அரிசி வகைகள், விதைகள், கைத்தறியால் நெசவு செய்யப்பட்ட ஆடைகள் ஆகியவையும் இடம்பிடித்திருந்தன. மேலும், சிறுதானிய உணவகங்களும் மக்களை அதிக அளவில் ஈர்த்தன.
இந்நிகழ்வில், முதன்முறையாக, ‘நல்ல கீரை’ அமைப்பு, இயற்கை வேளாண்மையில் சாதித்த பல்துறை சார்ந்த ஆளுமைகளுக்கு விருதுகளும் வழங்கியது. இயற்கை வேளாண்மை, முன்னோடி விவசாயிகள், விவசாயப் பிரச்சினைகள் போன்ற பல விஷயங்களை வெளியிட்டுவரும் ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘நிலமும் வளமும்’ இணைப்பிதழ் அச்சு ஊடகப் பிரிவில் விருது பெற்றது.
இந்தத் தருணத்தை, விவசாயிகளுடனும் வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம்!