

காளான் வளர்ப்பு என்பது மிகவும் லாபகரமான தொழில். எனினும், தரமான காளான் விதைகள் கிடைப்பது, வைக்கோல் மூலம் காளான் படுக்கை தயார் செய்வது, சுகாதாரம், தட்பவெப்பம், ஈரப்பத நிலைகளை சரியாக பராமரிப்பது என பல்வேறு சவால்கள் உள்ளன. தரமான காளான் உற்பத்திக்கு நாள் முழுவதும் கடுமையாக உழைத்தால்தான் நல்ல லாபம் ஈட்ட முடியும்.
இந்த சவால்களுக்கெல்லாம் நவீன முறையில் தீர்வு காணும் வகையில், முற்றிலும் இணைய வழி ஆட்டோமெட்டிக் தொழில்நுட்பத்தை சென்னையைச் சேர்ந்த ‘இயற்கை டெக் லேப்’ எனும் புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மிகக் குறைந்த நேரம் மட்டுமே செலவிட்டு, காளான் வளர்ப்பில் அதிக லாபம் ஈட்டுவதற்கான வழிகாட்டுதலை விவசாயிகள், இல்லத்தரசிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு இந்நிறுவனம் வழங்கி வருகிறது.