

‘இந்த ராணிக்காகத்தான்டா காத்திருந்தேன்!’ கடலையும் மீனையும் கொண்டாடுகிற மூக்குத்திப்பெண்ணின் முகப்பு ஓவியத்துடன் (ஓவியர் ராமலிங்கம்) மானிடவியல் ஆய்வாளர் பகத்சிங், புவியியல் பேராசிரியர் நிரஞ்சனா இருவரும் எழுதித் தொகுத்திருக்கும் ‘நெய்தல் கைமணம்’ நூலைக் கையில் ஏந்தியிருந்தேன். அப்போது ‘பதினாறு வயதினிலே’ திரைப்படத்தில் பரட்டை சொல்லுகிற மேற்கண்ட வசனம்தான் நினைவுக்கு வந்தது. முனைவர் பகத்சிங் பழங்குடி மானுடவியல்/ இனவரைவியலில் ஆழங்கால்பட்டவர்.
அம்மாவின் கைமணத்தால் வார்க்கப்பெற்ற பகத்தின் சுவையரும்புகள் வட தமிழகக் கடற்கரைகளின் பண்பாட்டு உணவு வகைகளைத் தேடிச் சென்று, அவற்றை நிரஞ்சனாவின் நுட்பமான பங்களிப்புடன் அருமையான நெய்தல் ஆவணமாகத் தொகுத்துள்ளார். சென்னைப் பெருநகர மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘அத்தோ’ பர்மாவிலிருந்து நாடு திரும்பியவர்களின் கொடையளிப்பு என்கிறார்கள்.