

ஆண்டின் தொடக்கத்தில் தடங்காட்டிக் கருவி பொருத்தப்பட்டிருந்த வெண்முதுகுப் பாறு கழுகு ஒன்று மகாராஷ்டிரத்திலிருந்து வழிதவறியது. கடைசியாகப் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரிமளம் என்கிற ஊருக்கருகில் ஆட்டுக்கிடை போட்டிருந்த கீதாரியின் குடிலுக்கருகில் தஞ்சமடைந்தது. அவற்றைக் கண்காணிப்பதற்காகப் பறவை ஆர்வலர் வாழை குமாருடன் அங்கு சென்றிருந்தேன். பறக்கத் தெம்பில்லாமல் இருந்த அப்பறவைக்கு இறைச்சி வழங்கினோம்.
அப்பறவை தஞ்சமடைந்த இடத்திற்கு அருகிலேயே நாய் ஒன்று செத்துக்கிடந்தது. ஆகா, அதற்கு நல்ல உணவு கிடைத்தது. இறந்த நாயை உண்டு தெம்பாகிய பின் பறந்துவிடும் என்று நம்பி, அதன் பார்வையில்படும்படி நாயை இழுத்துப் போட்டேன். ஆனால் நாயை உற்றுப்பார்த்தபோது, அதன் உருவம் மிகவும் கோரமாகத் தெரிந்தது. இயல்பான மரணமாகத் தெரியவில்லை. அது எனக்கு ஐயத்தை ஏற்படுத்தியது.