

பார்வையாளர் முன்னிலையில் பல்வேறு தரப்பினர் பங்கேற்கும் சிறு குழு விவாதங்கள் (பேனல் டிஸ்கஷன்) பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தவிர்க்க முடியாததாகி வருகின்றன. ‘காலநிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தை’ என்கிற தலைப்பில் இத்தகைய நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து, தமிழகம் முழுவதும் உள்ள பல கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி.
இந்தியாவின் பார்வையில் காலநிலை மாற்றம் சார்ந்த பிரச்சினைகளைப் பேசுகையில், இந்தியாவோடு, அருகில் உள்ள சக்திவாய்ந்த நாடான சீனா, வளர்ந்த நாடுகள், சிறு தீவு நாடுகள், கார்பன் வெளியீட்டைக் குறைப்பதோடு, தனது உற்பத்தியையும் தக்கவைக்க வேண்டிய நிலையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள், கார்பனை அதிகம் வெளியிடும் நாடுகளிடமிருந்து பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இழப்பீட்டைப் பெற்றுத் தரும் பொறுப்பில் இருப்பவர்கள், காலநிலை அறிவியலாளர்கள், சென்னை அல்லது குஜராத் கடற்கரையை நம்பி வாழும் மீனவர்கள் போன்றோரும் பங்குதாரராக இருப்பார்கள். ‘காலநிலை மாற்றம் என்பதே கட்டுக்கதை’ என்கிற தரப்பும் இருக்கும்.