

சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சூழல் நிகழ்ச்சி ஒன்றுக்காகச் சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமிக்குக் காட்டுயிர் செயல்பாட்டாளர் சு.பாரதிதாசனுடன் சென்றிருந்தேன். அங்கே வாகனங்கள் நிறுத்தும் பகுதிக்கு அருகில் இலைகள் தடிப்பாக இருந்த ஒரு மரத்தைக் காட்டி, காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ரஞ்சித்டேனியல்ஸ் விளக்கினார்.
அது நறுமணம் உள்ள வெள்ளை மலர்களைக் கொண்ட புன்னை. கடலோரத் தாவரமான அது தற்போது பரவலாக வளர்க்கப்படாததையும் அவர் சுட்டிக்காட்டினார். எங்கள் தெருவிலும் பல இடங்களிலும் பரவி வளர்ந்திருக்கும் புங்க மரத்தைப் பற்றி எனக்குத் தெரியும். இதுவோ புன்னை.