குறுவை நெற்பயிரைக் காப்பாற்ற…

குறுவை நெற்பயிரைக் காப்பாற்ற…
Updated on
1 min read

ற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பகல்நேர வெப்பநிலை அதிகம் உள்ள இக்காலகட்டத்தில், நாற்றாங்கால் மற்றும் நடவு வயலில் பல்வேறு வகையான இலைச் சிலந்திகளின் தாக்குதல் பரவலாகக் காணப்படுகிறது.

இலைச் சிலந்தியின் தாக்குதல் வரப்பு ஓரங்களிலிருந்து ஆரம்பித்து மற்ற இடங்களுக்குப் பரவுகிறது. இந்தப் பூச்சியானது நெற்பயிர் இல்லாத நேரத்தில் எருமைப் புல் எனப்படும் களைச் செடியில் இனவிருத்தி செய்கிறது. பூச்சியின் சேதம் அதிகரிக்கும்போது இலை காய்ந்து சருகாகிவிடும். சிறிய உருவத்திலும் இலையின் பின்பகுதியில் சிலந்தி வலைகளுடனும் இந்தப் பூச்சி காணப்படுகிறது.

முதலில் வெண்ணிறப் புள்ளிகள் தோன்றி, பின்பு புள்ளிகள் அனைத்தும் சேர்ந்து இலை முழுவதும் வெளிறிய நிறத்தில் காணப்படும். தாக்கப்பட்ட இலைகளின் மேற்பரப்பில் ‘தவிடு’ தெளித்ததுபோல வெண்ணிறப் புள்ளிகள் காணப்படும். இதனால், பூக்கும் பருவத்திலும் மணிபிடிக்கும் பருவத்திலும் மகசூல் இழப்பு ஏற்படும்.

இலைச் சிலந்தியின் முட்டைப் பருவம் 1 முதல் 3 நாட்கள். முட்டையிலிருந்து வெளிவரும் இளம் குஞ்சுகள் பல நிலைகளில் உயிர் வாழ்ந்து சேதத்தை ஏற்படுத்தி 7 -10 நாட்களில் முதிர்ந்த பூச்சிகளாக உருமாறுகின்றன.

இளம் பருவத்தில் இதன் தாக்குதல் ஏற்பட்டால் செடியின் வளர்ச்சி குன்றி, குறைவான தூர்களை உருவாக்கும். இச்சிலந்தியால் ஏற்படும் சேதம், வெயில், ஈரப்பதம் அதிகம் உள்ள மாதங்களான ஜூன், ஜூலை மாதங்களில் அதிகமாகக் காணப்படும்.

இதைக் கட்டுப்படுத்துவதற்குத் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் முனைவர் வெ.ரவி, சில வழிமுறைகளைக் கூறுகிறார்.

“நெற்பயிர் இல்லாத காலங்களில் எருமைப் புல் என்ற களைச் செடிகளில் இப்பூச்சிகள் வாழ்வதால் வயல்வரப்புகளில் இப்புல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பரிந்துரை செய்யப்பட்டுள்ள அளவு தழைச்சத்தைப் பிரித்து இட வேண்டும். ஒரே பயிரைத் திரும்பத் திரும்ப இடுவது தவிர்க்கப்பட வேண்டும். ஏக்கருக்கு 600 மில்லி டைகோபால் அல்லது நனையும் கந்தகத் தூள் 1 கிலோ வீதம் 200 லிட்டர் நீரில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

தேவைப்பட்டால் 15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மறுமுறை தெளித்து இந்த இலைச் சிலந்தியைக் கட்டுப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 94890 56726, 94431 41045 என்ற எண்களில் தொடர்புகொண்டு சந்தேகத்தை விவசாயிகள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in