

எப்போதும் பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் ஒரு பறவை அமைதியாக முடங்கியிருந்தது எனக்குச் சட்டென்று வித்தியாசமாகப் பட்டது. அந்தக் கோலத்திலும் பறக்கும் பாவனையிலேயே இருந்த அந்தக் காக்கை எனக்கு மெல்லிய விதிர்விதிர்ப்பை ஏற்படுத்தியது. மனதால்கூட ஒரு பறவை எப்போதும் பறந்துகொண்டே இருக்கும் போலும்! ஏதோ தாள முடியாத வலியில் அது இருப்பது மட்டும் புரிந்தது. பக்கத்தில் ஒரு மின்மாற்றி. என்ன நடந்திருக்கும் என்று ஒருவாறு யூகித்தேன்.
‘வலியது பிழைக்கும்’ என்னும் இயற்கையின் கறாரான விதிக்கு முன்னால் எந்த மேல்முறையீடும் செல்லாது என்றாலும், என்னால் அந்தக் காகத்தைக் கடந்து செல்ல முடியவில்லை. பறவை ஆர்வலர் நண்பர் ஒருவரை அழைத்தேன். ஒளிப்படங்கள் அனுப்பச் சொன்னார். “கரண்ட் கம்பியில் அடிபட்டிருக்கும் போல இருக்கு நிரஞ்சன். ஒண்ணும் பண்ண முடியாது. விட்டுடுங்க. தானா சரியாக வாய்ப்பு இருக்கு.” என் உள்ளுணர்வு விடவில்லை, உந்தித் தள்ளியது. “எங்க வீட்டுப் பக்கத்துல ஒரு தனியார் கால்நடை மருத்துவமனை இருக்கு.