

மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில், முடிவில்லாமல் பரந் திருக்கும் தேயிலை, காபித் தோட்டங்களில் பசுமையோடு ஒளிரும் ஓர் அழகிய நகரம் - வால்பாறை. இங்கு வாழும் பழங்குடியினரும் உள்ளூர் மக்களும் இந்த ஊரை ‘ஏழாவது சொர்க்கம்’ என்று அன்புடன் அழைக்கிறார்கள். குளிர்ந்த காற்று, மேகங்கள் சூழ்ந்த மலைகள், ஆங்காங்கே அருவிகள் வழிந்தோடும் இந்தப் பகுதி, காட்டுயிர் ஆர்வலர்களுக்கு ஒரு கனவு.
காடு, தேயிலைத் தோட்டங்கள் சாலையின் இருபுறமும் பரந்து கிடக்கும் சூழலில், நாங்கள் தவளைகளைத் தேடிக்கொண்டிருந்தோம். நாங்கள் என்று இங்கே குறிப்பிடுவது என் மேலாளர் முனைவர் விஷ்ணுப்பிரியாவையும் என்னையுமே. அந்தச் சாலையோரச் சேற்றில் சற்றே வியப்பூட்டும் ஒரு மர்ம உயிரினத்தை எதிர்கொண்டோம். சற்று அருகில் சென்று நான் அதைக் கண்டபோது, அது மண்புழு என்றே நினைத்தேன்.