

எ
ந்த ‘சிட்டி’யில் வாழ்ந்தாலும், ‘எலக்ட்ரிசிட்டி’ இல்லாமல் வாழ முடியாது என்பது நம் காலத்தின் நிதர்சனம்!
மின்வெட்டு, மின்சாரச் செலவு எனப் பல பிரச்சினைகளுக்கு மாற்று வழிகளை மக்கள் தேடி வரும் வேளையில், ‘வீடுகள், நிறுவனங்களுக்கு மட்டும்தான் சோலார் பவர் இருக்கணுமா..? இங்கெல்லாம் இருக்கக் கூடாதா?’ என்னும் ரீதியில், புதுமையைச் செய்திருக்கிறது சென்னை தி. நகர் பகுதியில் இருக்கும் மாம்பலம் காவல் நிலையம். தமிழ்நாட்டிலேயே சூரியசக்திக் கலன்கள் (சோலார் பேனல்) அமைக்கப்பட்டிருக்கும் ஒரே காவல் நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது இது!
அந்தக் காவல் நிலையத்தின் மாடியில் சுமார் 1,200 மீட்டர் சதுர அடியில் சூரியசக்திக் கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சூரியசக்திக் கலன்கள் மூன்று கிலோ வாட்வரை மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
இந்தத் திட்டத்தைப் பற்றிக் காவல் நிலைய ஆய்வாளர் பிரபுவிடம் கேட்டபோது, “இந்த சோலார் பேனல் திட்டத்தை எங்களின் இணை ஆணையர் அரவிந்தன்தான் அறிமுகப்படுத்தினார். அவரோட சொந்த முயற்சியில் சில தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோலார் பேனல் வந்த பிறகு, இங்கு மின்வெட்டுப் பிரச்சினை இல்லை. முன்பெல்லாம் தோராயமாக இரண்டு மாதங்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் மின் கட்டணமாக வரும். இப்போது அது கணிசமாகக் குறைந்திருக்கிறது” என்றார்.
தன் சொந்தச் செலவில் சூரியசக்திக் கலன்கள் அமைத்திருக்கும் இணை ஆணையரைப் பாராட்டும் அதே வேளையில், அரசே இப்படி எல்லாக் காவல் நிலையங்களிலும் சூரியசக்திக் கலன்கள் அமைக்க முன்வரலாமே என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
மின்சாரக் கட்டணம் நிச்சயமாகக் குறையுமே?