

பனைப் பொருட்களைத் தேடி ஓடுவது ஒரு பண்பாட்டுச் செயல். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். அவை அந்த ஊரிலிருப்பவர்களுக்கே தெரியாமல், மறைந்து போயிருக்கும். பனை சார்ந்த பொருட்களைக் குறித்துப் பல வேளை, எதுவுமே தெரியாதிருப்பதன் பொருள், நமக்கு மிகச் சமீபமாக இருக்கும் எளிய மனிதர்களை விட்டு நாம் விலகிவிட்டிருக்கிறோம் என்பதுதான்.
ஒரு வருடத்துக்கு முன்பு, எனது புதுச்சேரி பயணத்தின்போது பாண்டியன் என்ற நண்பர், ‘சுமார் 10 வருடங்களுக்கு முன்புவரை ஓலையில் செய்யப்பட்ட ‘பறி’ என்ற பையை எடுத்தபடிதான் அனைவரும் மீன் வாங்கச் செல்வார்கள்’ என்ற தகவலைச் சொன்னார். அதற்குப் பிறகு, அதைக் குறித்துப் பலரிடம் நான் கேட்டும், எனக்கு பறியைப் பார்க்கும் வாய்ப்போ அதைச் செய்பவர்கள் குறித்த தகவல்களோ கிடைக்கவே இல்லை.
இந்த முறை ‘பனை மரம்’ என்ற மிகச் செறிவான புத்தகத்தை எழுதிய பண்ருட்டி இரா. பஞ்சவர்ணம், பனை விதைகளைப் பரவலாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ராமநாதன் ஆகியோரின் உதவியை நாடினேன். புதுச்சேரியைச் சல்லடை போட்டுத் தேடினோம். அப்போது புதுச்சேரியிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சின்ன வீராம்பட்டினம் என்ற கிராமத்தை வந்தடைந்தோம்.
மீன்களுக்கான பெட்டி
மீனவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளில் பறி செய்வார்கள் என்று தேடிச் சென்ற எங்களுக்கு ஒருசேர ஏமாற்றமும் ஆச்சரியமும் காத்திருந்தன. பனை ஓலையில் மக்கள் பயன்பாட்டுக்கான பறி அவர்களிடம் இல்லை. ஆனால் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்படும், ஓலையில் செய்யப்பட்ட குடுவை ஒன்று அவர்களிடம் இருந்தது. குமரி, நெல்லை மாவட்டத்தில் அதற்கு ஒப்பான ஒரு வடிவத்தை நான் கண்டதில்லை.
உள்நாட்டு மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை இடுகின்ற ஒரு பெட்டிதான் ‘பறி’. இது பார்ப்பதற்குச் சுரைக் குடுவை போலவே இருக்கும். ஆனால் சில நூதனமான அமைப்புகள் இதற்குள் உண்டு. இதன் சிறிய வட்ட வடிவ வாயிலிருந்து பின்னல்கள் தொடங்குகின்றன. ஒருவிரல் அகலம் உள்ள ஓலைகளைக் கொண்டு உருவாகிவரும் இதன் பின்னலகள் இறுதியில் இரண்டாக கிழிக்கப்பெற்று, நேர்க்கோட்டில் முடிச்சு போன்ற பின்னல்களால் நிறைவு பெறுகிறது.
தப்பிக்க முடியாத மீன்கள்
குருத்தோலைகளைக் கொண்டே இவற்றைப் பின்னுகிறார்கள். ஆகவே நெகிழும்தன்மை கொண்டதாக இருக்கிறது. இந்த நெகிழும்தன்மைக்கும் ஒரு காரணம் இருக்கிறது. என்னதான் கையளவுள்ள சிறிய வாய் அமைத்திருந்தாலும், உயிருடன் பிடிக்கப்படும் மீன்கள், துள்ளி வெளியே சென்றுவிடாதபடி இருக்க ஒரு அமைப்பைச் செய்திருக்கிறார்கள்.
இடுப்பில் கட்டி, குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும்போது மீன்களைத் தவறவிடாமல் இருப்பதற்காகவே இந்த ஏற்பாடு. குருத்தோலையானபடியால் பின்னலை சற்றே மடக்கிவிடுவார்கள். அப்போது அது பார்ப்பதற்கு மனித பிருஷ்டம் போலக் காட்சியளிக்கும்.
பறி செய்வதில் திறன் வாய்ந்த நான்கு குடும்பங்கள் இன்றும் இந்தப் பகுதியில் வாழ்கின்றன. இவர்களுள் மறைமலை அடிகள் தெருவைச் சார்ந்த ராஜேந்திரன், இன்றும் பறி முடைந்து விற்பனை செய்கிறார்.
கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com