

ஒவ்வொரு முறை புத்தகக் கடைகளுக்கும் புத்தகக் காட்சிகளுக்கும் செல்லும் போதெல்லாம், நான் கூர்ந்து கவனிப்பதில் ஒன்று அரிச்சுவடிகளும் சுவர்ப்படங்களும்தான் (charts). குறிப்பாக, அவற்றில் தரப்பட்டிருக்கும் உயிரினங்களின் படங்களை என் கண்கள் நோட்டமிடும். பெரும்பாலும் அவற்றில் இருப்பவை ஆப்ரிக்க யானை, பென்குவின், பஞ்சவர்ணக்கிளி, வரிக்குதிரை போன்ற நம் நாட்டில் இல்லாத உயிரினங்களே.
நம் வீட்டின் அருகில் காணப்படும் சிட்டுக்குருவியோ, அரணையோ, வேப்ப மரமோ அதில் இருக்காது. இயற்கை பாதுகாப்பு குறித்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துச்சொல்லும் நிகழ்வுகளில், நான் முதலில் திரையில் காட்டுவது விளம்பரங்களில் வரக்கூடிய சின்னங்களே (logos).