Last Updated : 28 Jul, 2018 11:13 AM

 

Published : 28 Jul 2018 11:13 AM
Last Updated : 28 Jul 2018 11:13 AM

பப்பாளியால் ‘பளபளக்கும்’ விவசாயி!

‘பழங்களின் தேவதை’ என அழைக்கப்படும் பப்பாளி, எல்லாப் பருவ காலத்திலும் கிடைக்கும் சுவையான பழம். எனவே, இதை ‘ஏழைகளின் கனி’ என்றும் கூறுவர். மனித உடலின் ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டிற்குமே பப்பாளியின் பங்கு மகத்தானது. பலவகையான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழங்களில் பப்பாளி முதன்மையானது.

பப்பாளிப் பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளைக் கொல்லும் சத்து இருப்பதால், பப்பாளியைச் சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய்க் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை. குழந்தைகள், பப்பாளிப் பழத்தைச் சாப்பிடுவதால் அவர்களின் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும். கண் பார்வை சிறப்பாக இருக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். அடிக்கடி பப்பாளியைச் சாப்பிடுபவர்களை எந்த நோயும் அண்டாது எனக் கூறப்படுகிறது.

பருவநிலைகளில் ஏற்படும் மாற்றம், தண்ணீர்ப் பற்றாக்குறை, கூலி ஆட்கள் பற்றாக்குறை, விவசாய இடுபொருட்களின் விலை உயர்வு மற்றும் விவசாயப் பொருட்களுக்கான குறைந்த விலை உள்ளிட்ட காரணங்களால் வழக்கமாகச் சாகுபடி செய்யக்கூடிய பயிர்களைச் சாகுபடி செய்யாமல் மாற்றுப் பயிர்களைச் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர் விவசாயிகள்.

இவற்றில் பழப்பயிர்களும் மலர்களும்தாம் முதல் இடத்தைப் பிடிக்கின்றன. அரியலூர் போன்ற வறட்சியான மாவட்டங்களில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பப்பாளி போன்ற பழப் பயிர்களுக்கு விவசாயிகள் மத்தியில் ‘மவுசு’ உண்டு. மேலும், மத்திய, மாநில அரசுகள் பப்பாளி மரக்கன்றுகள், சாகுபடிக்கான இடுபொருட்கள் மற்றும் சொட்டுநீர்ப் பாசனம் போன்றவற்றுக்கு மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குவதால் விவசாயிகளுக்கு இதன் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு பயிர் சாகுபடி செய்து செலவுக்கேற்ற வருமானம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பப்பாளியைச் சாகுபடி செய்து அதிக வருமானம் ஈட்டி வருவதாக மகிழ்ச்சியுடன் கூறுகின்றார் அரியலூர் மாவட்டம் வெண்ணங்குழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாதவன்.

இவர், தனக்குச் சொந்தமான நிலத்தில் நெல், கரும்பு, கடலை உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்து வந்துள்ளார். கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் சாகுபடியில் போதிய வருமானம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டார். அப்போதுதான் மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய எண்ணி அனைத்துப் பருவ காலத்திலும் மகசூல் தரக்கூடிய பப்பாளியைச் சாகுபடி செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து, பப்பாளியைச் சாகுபடி செய்த, அனுபவம் உள்ள விவசாயிகளிடமும், ஜெயங்கொண்டத்தில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தையும் நாடி சாகுபடி குறித்து கேட்டறிந்த மாதவன், தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பப்பாளியைச் சாகுபடி செய்யத் தயாரானார். இதையடுத்து பப்பாளியில் அதிக மகசூல் மற்றும் சுவையான பழத்தைத் தரக்கூடிய ‘ரெட்லேடி’ என்ற ரகத்தைத் தேர்வு செய்துள்ளார்.

அவரிடம் பேசியபோது, “ரெட்லேடி பப்பாளி ரகத்தின் வயது 22 மாதங்கள். இந்தப் பயிர் நடவுக்கு ஆடி, ஆவணி மாதங்கள் சரியானவை. இந்த ரகம், நல்ல சிவப்பு மஞ்சள்  கலரில், அதிக சுவை கொண்டதாகவும் உள்ளது. விளைச்சலையும் அதிகமாகத் தருகிறது. ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து 60 டன் முதல் 80 டன் வரை மகசூல் கிடைக்கிறது.

தரமான நாற்றுகளை நர்சரிகளில் வாங்கி, 5-க்கு 5 என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 20-வது நாளில் களை எடுத்து, தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய 150 கிலோ உரத்தைக் கொடுப்பது அவசியம். அதன் பிறகு 7 மாதம் வரை பராமரிப்பு என்பது பெரிதாக இருப்பதில்லை. போதுமான இடைவெளியில் கன்றுகள் இருப்பதால் சிறிய வகை உழவு இயந்திரத்தைக் கொண்டு உழவு செய்து விடலாம்.

நடவு செய்த 6-வது மாதத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கிவிடும். 8- வது மாதம் காய் மற்றும் பழங்கள் அறுவடைக்கு வந்துவிடுகின்றன. தொடர்ந்து, 14 மாதங்கள் மகசூல் கொடுக்கிறது. இன்றைய தினத்துக்கு கிலோ ரூ.7 என வியாபாரிகள் வயலிலேயே எடுத்துச் செல்கின்றனர். சில நேரம் அதிகபட்சமாக கிலோ ரூ.16-க்கும் எடுத்துச் செல்கின்றனர்.

இதில், சராசரியாக வருடத்துக்கு 14 மாதம் நடைபெறும் அறுவடையில் மூன்றரை லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. 22 மாதங்கள் முடிந்ததும், மரங்களை வெட்டி வயலிலேயே போட்டு, ரொட்டவேட்டர் கொண்டு உழுதுவிட்டால், அனைத்தும் நிலத்துக்கே உரமாகிவிடுகிறது.

ரெட்லேடி ரக பப்பாளிக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், விற்பனைக்கும் பிரச்சினையில்லை. வியாபாரிகளே நேரடியாக வயலில் வந்து பழங்களை எடுத்துச் செல்கின்றனர். அரசின் மானியத்துடன் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துள்ளதால், தண்ணீர் அதிகமாகத் தேவைப்படுவதில்லை. சொட்டுநீர் பாசனத்தால், களைகள் அதிகம் இருப்பதில்லை. மரத்தைச் சுற்றி அதிகபட்சமாக 2 அடிக்கு மட்டுமே தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளது. மரக்கன்றுகளுக்குத் தேவையான உரங்களைச் சொட்டுநீர்ப் பாசனம் மூலமே கொடுப்பதால், கூலி ஆட்கள் அதிகமாகத் தேவைப்படுவதில்லை.

பழங்களின் அறுவடையை வியாபாரிகளே ஆட்கள் கொண்டு அறுவடை செய்துகொள்வதால் நமக்கு அதற்கான செலவும் இல்லை. பப்பாளிச் சாகுபடி செய்துள்ள வயலில் நான் மண்வெட்டி எடுத்து மடவாய் மாத்தியதில்லை. அனைத்தும், குழாய்களின் இணைப்புகளே.

வறட்சி மிகுந்த மாவட்டத்தில் மட்டுமல்ல; அனைத்து மாவட்டங்களிலும் சொட்டு நீர்ப் பாசனம் மூலம் விவசாயம் செய்தால், தண்ணீர்ப் பற்றாக்குறை இருக்காது. விவசாயத்திலும் வெற்றி பெறலாம்!” என்கிறார் பூரிப்போடு.

விற்பனையைப் பொறுத்தவரை, சென்னையில் மொத்த வியாபாரிகள் உள்ளனர். வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் அவர்களை அணுகி விற்பனை செய்யலாம்.

“நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ள பப்பாளி ரக நாற்றுகளை வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி அரசு நாற்றுப் பண்ணைகள் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்” என்கிறார் மாதவன்.

மாதவன் தொடர்புக்கு- 9965845658

கட்டுரை, படம்: பெ.பாரதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x