

சுற்றுச்சூழல் பற்றிய சொல்லாடல் மெதுவாக உருவாகிவரும் அதேநேரம், காட்டுயிர், இயற்கை சார்ந்த கவனம் அதில் மைய அம்சமாக இன்னும் மாறவில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் பிரச்சினைகள் என்பவை நகர்ப்புறச் சுற்றுச்சூழல் பிரச்சினைகள், மாசுபாடு மட்டுமல்ல. சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதன் மையப்புள்ளி இயற்கையைப் பாதுகாப்பதுதான். இந்தப் பின்னணியில் துறைசார்ந்து இயங்கிவரும் பேராசிரியர்கள் தமிழில் அதிகமாக எழுதுவதில்லை. அதிலிருந்து மாறுபட்டு காட்டுயிர் உயிரியல் சார்ந்த பேராசிரியரான ச.சாண்டில்யன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
நாம் அறிந்த வரையில் பால்வீதி, சூரியக் குடும்பம் எனப் பிரம்மாண்டமான இயற்கை அம்சங்களில் உயிருள்ள கோளம் புவி மட்டுமே என்பதை உணர்த்தியுள்ளார். தேசிய உயிர்ப்பன்மை ஆணையத்தின் சார்பில் ஆக்கிரமிப்புத் தாவரங்கள்-உயிரினங்கள் குறித்து அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாகச் சில கட்டுரைகள் உருவாகியுள்ளன. அதிகம் கவனம் செலுத்தப்படாத ஒளி மாசு உள்ளிட்ட அம்சங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார். உயிர்ப்பன்மை குறித்த ஓர் அறிமுக நூலாக இது பயன்படும்.