

சென்னையில் இந்த ஆண்டு வெயில் கொளுத்தத் தொடங்குவதற்கு முன்பே, சாலைகளைப் பிரகாசமாக்கிக் கொண்டிருந்தது ஒரு மலர். வெயிலின் உக்கிரத்தில் வியர்வை வழிய நாம் சாலைகளைக் கடந்து பயணித்துக்கொண்டிருக்கும்போது, மனதுக்குக் குளிர்ச்சியாகவும் இதமளிக்கும் வகையிலும் பூத்துக்குலுங்கும் ஒரு மலர் உண்டா எனக் கேட்டால் கொன்றையின் பெயரைச் சொல்லலாம். மரம் முழுக்க மஞ்சள் மலர்க்கொத்துச் சரங்கள் பூத்துக்குலுங்குவது சட்டெனத் திரும்பிப்பார்க்க வைக்கும் கண்கவர் காட்சியாக இருக்கும்.
பளிச்சென்ற மஞ்சள் பூக்கள் சரம்சரமாக, திராட்சைக்கொத்துகள் போலத் தொங்கிக்கொண்டிருக்கும். சாண்டிலியே சரவிளக்குகள்போல இந்த மலர்க்கொத்து இருப்பதாக மேலை நாட்டினர் குறிப்பிடுகிறார்கள். இளவேனில் காலமான சித்திரை மாதத்தில் இவை அதிக அளவில் பூப்பதால், கேரளத்தில் விஷு பண்டிகையின்போது இந்த மலர்கள் விசேஷமாகக் கருதப்படுகின்றன. இது தங்கத்தின் நிறத்தைப் போன்றிருப்பதால், இந்தப் பூ வளத்தைக் கொண்டுவருவதாகக் கருதப்படுகிறது. விஷுவுக்கு இந்தப் பூக்களால் முற்றங்களை அலங்கரிப்பது வழக்கம்.