வசந்த ராணியின் வருகை!

வசந்த ராணியின் வருகை!
Updated on
1 min read

சென்னை எங்கும் ரோஸ் அல்லது இளஞ்சிவப்பு நிறப் பூக்கள் பூத்துக்குலுங்கும் மரங்களை கடந்த 10 நாட்களாகப் பார்க்க முடிகிறது. இந்த மரங்களிலிருந்து கீழே விழும் பூக்கள் காற்றில் மிதந்து வருவதையும், தரையில் ஒரு இளஞ்சிவப்பு மலர்ப்படுக்கையை அமைத்திருப்பதையும்கூடப் பார்த்திருக்கலாம். இலைகளை மறைத்தவாறு, இலைகளே தெரியாமல் பூக்கள் மலர்ந்திருக்கும் இந்த மரம், மலரின் பெயர் என்ன?

ரோசி டிரம்பெட் (tabebuia rosea) என்கிற மரமே இது. இந்த மலர்கள் டிரம்பெட் இசைக்கருவியை ஒத்திருப்பதால் இந்த மரத்துக்கு இப்படிப் பெயர் வந்துள்ளது. தமிழில் இந்த மரத்துக்கு வசந்த ராணி என்கிற பெயர் வழங்கப்படுகிறது.

இந்த மரங்களில் சில அடர் இளஞ்சிவப்பு நிறத்திலும், சில வெளுத்த இளஞ்சிவப்பு நிறத்திலும் பூக்களைக் கொண்டுள்ளன. அதேநேரம் இரண்டு மரங்களையும் ஒரே வகையாகவே தாவரவியலாளர்கள் வகைப்படுத்தி உள்ளனர். இந்த மரங்களின் பூக்கும் காலம் மார்ச் முதல் மே வரை. அநேகமாக மார்ச் மத்தியில் இந்த மரங்கள் பூத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. தற்போது இந்த மலர்தல் அதிகரித்துள்ளது.

சென்னை மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை, மெரினா கடற்கரை சாலை, வாலாஜா சாலை, வேளச்சேரி எனப் பல பகுதிகளில் இந்த மரங்களைக் காண முடிகிறது.

இந்த மரம் பூத்துக்குலுங்குவது மனதை நிறைக்கும் காட்சியாக இருந்தாலும் இது நமது இயல் மரமல்ல. மெக்சிகோவை தாயகமாகக் கொண்ட மரம். மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரின் தேசிய மரமும்கூட. ஆனால், இந்தியாவில் இந்த மரம் செழிப்பாகவே வளர்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் ஆங்கிலேய தோட்டக் கலைத் துறை நம் நாட்டுக்குத் தருவித்த மர வகைகளில் இதுவும் ஒன்று.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in