

குள்ளநரி என்று அறியப்பட்ட காட்டுயிர் பெருமளவு குறைந்துவிட்டது. ஆனால் இன்றைக்கும் குழந்தைக் கதைகளில் தந்திரக்கார உயிரினமாக மட்டும் அது உயிர்வாழ்ந்துவருகிறது. ஒருபுறம் குள்ளநரிகள் தந்திரம் செய்வதாக, மோசமானவையாகச் சித்தரிக்கப்படும் அதேநேரம், அவற்றின் முகத்தில் விழித்தால் நல்லது நடக்கும் என்றொரு தவறான நம்பிக்கையும் நிலவுகிறது.
அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டத்தில் வாழும் குள்ளநரிகள், பொங்கல் நேரத்தில் பிடித்துக் கட்டப்பட்டு நரி ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் நரியாட்டம் நடத்தப்படுகிறது. ஓர் அப்பாவிக் காட்டுயிரை இப்படி வதைப்பது தவறு என்பதுகூடத் தெரியாமல்தான் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இது குறித்துக் கவனப்படுத்தும் வகையில் ‘குறுநரிகள் வாழ்ந்த காடு' என்கிற சிறு நூலை கோவை சதாசிவம் எழுதியுள்ளார்.