

விவசாயிக்கு விதைநெல் போல, கடற்குடிக்கு சங்காயம் என்னும் பொடிமீன் முக்கியமானது. இன்றைய மீன் குஞ்சுகளே வரவிருக்கும் வருடங்களின் மீன்வளம். கடும் பஞ்சத்தில்கூட ஒரு விவசாயி விதைநெல்லைத் தின்றழிக்கமாட்டார். விதைநெல் என்பது நாளையைக் குறித்த மனிதர்களுடைய நம்பிக்கையின் அடையாளம்.
கடல் சூழல் இப்போது தலைகீழாக மாறிவிட்டது. கட்டற்ற தொழில்நுட்பங்களும் மிகை முதலீடும் மீனவர்களுக்குத் தேவையற்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. முதலீட்டையும் பயணச் செலவினத்தையும் ஈடுசெய்யும் வகையில் குறைந்தபட்ச அறுவடை கிடைத்தால்தான் கட்டுப்படியாகும் என்கிற நெருக்கடி. இந்திய மீன்பிடி விசைப்படகுகள் வெளிநாடுகளில் சிறைபிடிக்கப்படும் செய்திகளை இந்தப் பின்னணியில் பார்க்கலாம்.