

சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்குக் காட்டுயிர்கள் மீது நீண்ட காலமாக ஆர்வம் உண்டு. தொலைதூரக் காடுகளில் உள்ள காட்டு விலங்குகள் எவ்வாறு உயிர்வாழ்கின்றன, தொடர்பு கொள்கின்றன, வளர்கின்றன என்பது பற்றி அடிக்கடி யோசிப்பேன். அவற்றில் குறிப்பாக இரைகொல்லிகளின் வேட்டையாடுதல் என்னைப் பெரிதும் கவர்ந்தது. வேட்டையாடுவதற்கு முழுமையான மன, உடல் வலிமை தேவைப்படுகிறது.
அத்துடன் பொறுமை உணர்வு, வியூகம் வகுத்தல், உணவைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாடு ஆகியவையும் சேர்ந்து கொள்கின்றன. இரைகொல்லிகள் மீதான என்னுடைய இந்த ஆர்வம் தொடரும் என்று அந்தக் காலத்தில் நான் நினைத்திருக்கவில்லை. செந்நாய், கீரி, சிறுத்தை, புனுகுப்பூனை, கரடி போன்ற காட்டுயிர்களைப் பற்றிய முறையான ஆராய்ச்சி நோக்கி எதிர்காலத்தில் நகர்வேன் என அப்போது எனக்குத் தெரியாது.