

உலகின் உயிரினங்கள் அதிகமான எண்ணிக் கையில் ஒன்றுதிரளும் இடம் பெரிங் நீரிணை. அலாஸ்காவின் செவார்ட் தீபகற்பத்துக்கும், ரஷ்யாவின் சுக்சி தீபகற்பத்துக்கும் தெற்கில் அமைந்திருக்கிறது பெரிங் கடல். வழக்கமாகப் பகல் வெளிச்சம் அங்கு 7 மணிநேரம் மட்டுமே இருக்கும். ஜூன் - ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் வடதுருவப் பகுதி சூரியனை நோக்கிச் சாயும். அந்நாள்களில் மட்டும் 17 மணிநேரப் பகல் வெளிச்சம் கிடைக்கும். க்ரில், மிதவை உயிரிகள் இந்தப் பருவத்தில் பல்கிப் பெருகுகின்றன.
இந்த மூன்று மாத காலமும் பெரிங் கடல் உயிர்த்துடிப்பு மிகுந்ததாக மாறிவிடுகிறது. ஆயிரக்கணக்கான கூன்முதுகுத் திமிங்கிலங்கள் (Hump back whales) தெற்கிலிருந்து புறப்பட்டு, 6,000 மைல் தொலைவிலிருக்கும் புவிக்கோளத்தின் எதிர்முனைக்கு ஒரு மாதக்காலம் பயணித்து, சரியாக ஜூன் மாதத் தொடக்கத்தில் பெரிங் கடலுக்கு வந்துசேர்கின்றன. கூன்முதுகுத் திமிங்கிலங்களுக்கு இன்னொரு பெயர் உண்டு- தாடைத் தட்டு (Baleen whales) திமிங்கிலங்கள்.