இயற்கையைத் தேடும் கண்கள் 15: ஆன்மாவை விடுவிக்கும் கழுகு

இயற்கையைத் தேடும் கண்கள் 15: ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
Updated on
1 min read

ஆங்கிலத்தில் ‘இஜிப்ஷியன் வல்சர்’ என்றும், தமிழில் மஞ்சள் பாறு, கிராமப்புற மக்களால் ‘பாப்பாத்திக் கழுகு’ என்றும் அழைக்கப்படும் இந்தப் பறவை, இந்தியா, மேற்கத்திய நாடுகள் சிலவற்றில் தென்படுகிறது. இதர கழுகு இனங்களைவிட அளவில் மிகவும் சிறியது இது.

மாடு, நாய், எலி உள்ளிட்ட உயிர்களின் சடலங்கள்தான் இவற்றின் முக்கிய உணவு. எனவே, இவற்றை குப்பை, கழிவு நிறைந்த பகுதிகளில் காண முடியும். மனிதர்கள் வாழும் பகுதியைச் சுத்தப்படுத்தும் இது, சிறந்த துப்புரவுப் பறவை. இதர கழுகு இனங்கள் அனைத்தும் தங்களது இரையை உண்பதற்கு, அவற்றினுடைய அலகு, கால்களைப் பயன்படுத்தும். ஆனால், இந்தக் கழுகு மட்டும், கல், குச்சி போன்ற சின்னச் சின்னக் கருவிகளைப் பயன்படுத்துகிறது.

ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் பகுதியில் உள்ள ஜோர்பீர் எனும் குப்பைக் கிடங்கில்தான் முதன்முதலில் நூற்றுக்கணக்கான கழுகுகளை ஒரே இடத்தில் பார்த்தேன். அவை அனைத்தும் ஒரே இனத்தைச் சேர்ந்த கழுகுகள் அல்ல. வேறு வேறு கழுகு இனங்களின் சங்கமம், அந்த இடம்!

பார்ஸி இன மக்களில் யாரேனும் இறந்தால், அவரது உடலை எரிக்கவோ, புதைக்கவோ செய்யாமல், ‘டவர் ஆஃப் சைலன்ஸ்’ (சுடுகாடு போன்ற ஒரு பகுதி என்று வைத்துக்கொள்ளுங்கள்) எனும் இடத்தில், இந்தப் பறவைகள் உண்பதற்காக வைத்துவிடுவார்கள். பறவைகளால் அந்தச் சடலம் உண்ணப்படும்போது, அந்த உடலுக்குள் இருக்கும் ஆன்மா விடுதலை அடையும் என்பது அவர்களின் ஐதீகம்.

ஆனால், சமீபகாலமாக இந்தப் பறவைகளின் எண்ணிக்கை ‘டைக்ளோஃபினாக்’ பாதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் குறைந்து வருகிறது. போதிய எண்ணிக்கையில் கழுகுகள் இல்லாததால், பார்ஸி மக்களும் தங்களது சடங்கிலிருந்து விலகி, மாற்று வழிகளைத் தேட ஆரம்பித்துள்ளனர்.

கட்டுரையாளர்,காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in