

துறையாடல், வறீதையா கான்ஸ்தந்தின்,
கடல்வெளி, தொடர்புக்கு: 94422 42629
சுனாமி எனும் ஆழிப்பேரலை நிகழ்ந்து 20 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கடல் மாறியிருக்கிறது. சமவெளி மனிதர்களான நாமும் அரசும் கடலையும் அதை மையமிட்டு வாழும் மீனவர்களையும் இப்போதாவது புரிந்துகொண்டிருக்கிறோமா? தன் களப் பயணங்களில் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புகள், நேர்காணல்கள் வழியே ஒரு விவாதத்தை முன்னெடுத்திருக்கிறார் பேராசிரியர் வறீதையா. நெய்தல் திணை சார்ந்த சொல்லாடலைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் அவருடைய நெடிய பயணத்தின் பெருவிளைச்சலான இந்நூல் ஒரு தனித்துவக் களஞ்சியம். மக்கள் குரலை எழுத்தில் ஆவணப்படுத்தி, அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறது துறையாடல்.
சமகால சுற்றுச்சூழல் சவால்கள், கட்டுரைத் தொகுப்பு, பாரதி புத்தகாலயம், தொடர்புக்கு: 044-2433 2924
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில், சுற்றுச்சூழல் சார்ந்த சமூகத்தின் கவனம் உடனடியாக அதன் மீது கவனம் குவிக்க வேண்டியுள்ளது. சுற்றுச்சூழல் புரிதல் என்பது சிறு வட்டத்துக்குள் அதைப் பற்றிப் பேசுவதால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய ஒன்றல்ல. நகரமயமாதல், புவி வெப்பமடைதல், பெருங்கடல் சூழலியல், நிலத்தடி நீர்ச் சிக்கல்கள், மருத்துவக் கழிவு, ஒலி மாசு, எங்கெங்கும் பரவிவரும் நுண்நெகிழி எனப் பல்வேறு பிரச்சினைகள் இந்த நூலின் கட்டுரைகள் வழி அலசப் பட்டுள்ளன. இதுபோன்ற தொகுப்பு முயற்சிகள் தொடர வேண்டும்.
ஊழிக் காலம், நாராயணி சுப்ரமணியன், நொமாட் ஃபேரி டேல்ஸ் அண்ட் ஹோப் இமோஜி பப்ளிகேஷன்ஸ், தொடர்புக்கு: 99449 69561
காலநிலை மாற்றம் குறித்த சொல்லாடல் தமிழில் தற்போதுதான் ஓரளவு கவனம் பெறத் தொடங்கியுள்ளது. இந்தப் பின்னணியில் காலநிலை மாற்றம், கடல் சார்ந்த சூழலியல் குறித்துத் தொடர்ச்சியாக எழுதிவரும் நாராயணி, காலநிலை மாற்றம் குறித்து எளிய எடுத்துக்காட்டுகளுடன் இந்த நூலில் விரிவாக அறிமுகப்படுத்தியுள்ளார். காலநிலை மாற்றத்தின் தீவிரம் குறித்த அறிமுகம் இந்த நூல் வழி கிடைக்கும்.
தவ்வை, பிரகாஷ் தங்கவேல், சூழல் அறிவோம், தொடர்புக்கு: 97915 03737
புவி, சூரியன், காற்று ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு, பருவகாலங்கள், காடு, கடல், மண் ஆகியவற்றின் இயல்புகளை அறிவியல் பார்வையில் எளிமையாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல். பல கோடி ஆண்டுகளாகப் புவியில் உயிர்கள் வாழ்வதற்கான நுட்பமான கட்டுமானங்களை இயற்கை உருவாக்கியுள்ள விதம், அவற்றின் தற்போதைய நிலை, காலநிலை மாற்றத்தால் புவி சந்திக்கும் நெருக்கடிகள், தீர்வுகளின் போலித்தன்மை, நாம் என்ன செய்ய முடியும் எனப் புதுமையான சொல்முறையில் இந்த நூல் பேசுகிறது.
ஆனைமலை, பிரசாந்த் வே., எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 99425 11302
தேக்குக் கட்டைகளின் தேவை, தேயிலைத் தோட்டங்கள், அணைகளுக்காக ஆனைமலைத் தொடரில் வாழும் பழங்குடிகள் வெளியேற்றப்பட்டனர். இந்தப் பின்னணியில் இயற்கை, காட்டுயிர் பாதுகாப்பின் மறுமுகம் குறித்து இந்த நாவல் பேசுகிறது. ஆனைமலையில் அமைந்துள்ள சரணாலயங்கள், புலிக் காப்பகங்களும் பூர்வகுடி மக்களை ஒடுக்குபவையாக உள்ளதை மலை, மலசர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த நாவலில் கூறியிருக்கிறார் பிரசாந்த் வே. ஏற்கெனவே பழங்குடிகளை மையமிட்ட ‘காடர்' சிறுகதைத் தொகுப்பை எழுதியவர் இவர்.
காடறிதல், கோவை சதாசிவம், குறிஞ்சி பதிப்பகம், தொடர்புக்கு: 99650 75221
இயற்கையை நெருங்கிப் பார்க்கும் ஆர்வம் தற்போது அதிகரித்துவருகிறது. பறவைகள், பாலூட்டிகள், பூச்சிகள், தாவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் மக்கள் ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். சிறு குழுவாக காடுகளுக்குப் பயணம் சென்று இயற்கை, உயிரினப் பன்மை, காட்டுயிர்கள் குறித்தும் பலர் அறிந்துகொண்டு வருகிறார்கள். காடறிதலின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள், காட்டுயிர்களின் முக்கியத்துவம், காட்டுயிர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் எனப் பல்வேறு விஷயங்களை இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது.
நெகிழிக் கோள், இரா.மகேந்திரன், காலச்சுவடு, தொடர்புக்கு: 04652 - 278525
அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் சர்வரோக நிவாரணியாகக் கருதப்பட்ட ஞெகிழி எனப்படும் பிளாஸ்டிக், இன்றைக்குப் பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரணமாகி இருக்கிறது. ஞெகிழிப் பொருள்களைப் பற்றிய விழிப்புணர்வு நம் அனைவருக்கும் தேவை. ஞெகிழிப் பொருள்களின் உற்பத்தி, சுற்றுச்சூழலில் அவற்றின் தாக்கம், ஞெகிழி மாசுபாட்டால் ஏற்படும் எதிர்விளைவுகள், வாய்ப்புள்ள தீர்வுகள் ஆகியவற்றைக் குறித்து இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது.
இலங்கை பட்சிகள், கஜவதினி கந்தசாமி, அபிராமி சிவரூபன், காக்கைக் கூடு, தொடர்புக்கு: 90436 05144
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டப் பறவைகள் குறித்த கையேடுகள் வரத்தொடங்கிவிட்டன. அதேநேரம் இலங்கையில் வாழும் தமிழர்களிடம் இது சார்ந்த அறிமுகம் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் இலங்கை பட்சிகள் என்கிற இந்த நூல் வெளியாகியுள்ளது. இலங்கைக்கு மட்டுமே உரிய 34 ஓரிடவாழ் பறவைகளை இந்த நூல் விரிவாக அறிமுகப்படுத்துகிறது. அதேநேரம் பறவைகளின் பெயர்கள், வடமொழிக் கலப்பு போன்ற விஷயங்களில் இந்த நூல் இன்னும் பல படிகள் மேலே செல்ல வேண்டும்.
குயில்கள், ஜான்சி பால்ராஜ், உயிர் பதிப்பகம், தொடர்புக்கு: 98403 64783
பறவைகள் குறித்த அறிமுகக் கட்டுரை களை எழுதிவரும் ஜான்சி பால்ராஜ், குயில்கள் குறித்த இந்த அறிமுக நூலை எழுதியுள்ளார். நாம் எளிதில் காணக்கூடிய குயில் வகைகள், அவற்றின் வாழ்க்கை முறை, குயில்களுடன் ஆசிரியரின் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
வேர்களை இழக்கும் பூமி, சுப்ரபாரதிமணியன், என்.சி.பி.எச்., தொடர்புக்கு: 044-26359906
சுற்றுச்சூழல் மாசுபாட்டை அடிப் படையாகக் கொண்டு நாவல்களை எழுதியுள்ள சுப்ரபாரதிமணியன், சுற்றுச்சூழல் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார். இந்தத் தொகுப்பில் சுற்றுச்சூழலை மையமிட்ட திரைப்படங்கள், சிறுகதைகளை மையமிட்டுச் சில கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுடன் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாநாடுகள், பசுமை அரசியல் ஆகியவற்றைப் பற்றியும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.