மாதவ் காட்கிலுக்கு ஐ.நா.வின் உயரிய விருது

மாதவ் காட்கிலுக்கு ஐ.நா.வின் உயரிய விருது
Updated on
1 min read

மேற்கு மலைத் தொடரைப் பாதுகாக்க வேண்டும் என அறிவியல்பூர்வமாக அறிக்கையை முன்வைத்த சூழலியலாளர் மாதவ் காட்கிலுக்கு, ஐ.நா.வின் உயர்ந்த சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்’ என்றழைக்கப்படும் இந்த விருது மேற்கு மலைத் தொடர் குறித்த விரிவான ஆய்வை முன்வைத்த குழுவிற்கு அவர் தலைமை வகித்ததற் காக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு மலைத் தொடர் யுனெஸ்கோவின் உலக மரபு இயற்கைத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக உயிர்ப்பன்மை செழிப்பிடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. மேற்கு மலைத் தொடர் சூழலியல் நிபுணர் குழுவின் தலைவராக மாதவ் காட்கில் செயல்பட்டிருந்தார்.

சூழலியல்ரீதியில் எளிதில் சிதைந்துவிடக்கூடிய பகுதியான மேற்கு மலைத் தொடரில் மக்கள்தொகை அதிகரிப்பால் ஏற்படும் அழுத்தம், காலநிலை மாற்றம், வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழு ஆராய்ந்தது. 2011இல் சமர்ப்பிக்கப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கை மேற்கு மலைத் தொடரை மூன்று கூருணர்வு மண்டலங்களாகப் பிரித்து, அவற்றின் அடிப்படையில் வளர்ச்சி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறியது.

கனிமச்சுரங்கம் தோண்டுதல், பாறை வெட்டுதல், புதிய அனல் மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்கள், பெரிய அளவிலான காற்றாலைகள் போன்றவற்றைக் கூருணர்வு மண்டலம் 1 இல் தடை செய்ய வேண்டும் என்றது. இந்த அறிக்கையின் பரிந்துரைகளைக் கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநில அரசுகள், தொழிற்சாலைகள், உள்ளூர் மக்கள் கடுமையாக எதிர்த்தனர். இந்த எதிர்ப்பால் காட்கில் குழுவின் அறிக்கை கைவிடப்பட்டு ராக்கெட் விஞ்ஞானி கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் மற்றொரு குழு அமைக்கப்பட்டது.

மேற்கு மலைத் தொடரைச் சூழலியல் கூருணர்வுப் பகுதியாக அறிவிக்க வேண்டுமென ஜூலை 2024 வரை ஐந்து வரைவு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், மாநில அரசுகள் எவற்றையுமே ஏற்கவில்லை. அதேநேரம், கேரளத்தில் 2018 தொடங்கி தொடர்ச்சியாக மலைச்சரிவும் இயற்கைப் பேரழிவுகளும் நிகழ்ந்துவருகின்றன. காட்கில் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தியிருந்தால், இந்தப் பேரழிவுகளின்போது மக்கள் உயிரையும் உடைமைகளையும் குறிப்பிட்ட அளவுக்காவது காப்பாற்றியிருக்க முடியும். - அன்பு

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in