

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பரவலாகிவரும் காலம் இது. தமிழ்நாட்டைப் போன்ற இயற்கை வளம் நிறைந்த, பல்வேறு திணை நிலங்கள் உள்ள பகுதிகள் குறித்து எதிர்காலத் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, இயற்கை வளத்தையும் உயிர்ப்பன்மையையும் அவசரமாகப் பாதுகாக்க வேண்டிய தேவை தீவிரமாக உள்ளது.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் தொடக்கம் என்பது நமது வீடு, சுற்றுப்புறம், நாம் வாழும் பகுதியில் உள்ள இயற்கை நிலப்பகுதிகளையும் அங்கு வாழும் பல்லுயிர்களையும் பாதுகாப்பதுதான். இந்தப் பின்னணியில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுச்சூழல் நடைகளையும் பாதுகாப்பு முயற்சிகளையும் முன்னெடுத்துவருகிறது ‘சூழல் அறிவோம்’ குழு.
இந்தக் குழு ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர் அருகேயுள்ள எலத்தூர் குளத்தையும் நாகமலைக் குன்றையும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக பறவை வளம் நிறைந்த எலத்தூர் குளம் குறித்தும், தாவர வளம் நிறைந்த நாகமலைக் குன்று குறித்தும் ஆவணப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சியின் விளைவாக இரண்டு பகுதிகளைப் பற்றிய வண்ணப் படங்களுடன் கூடிய நூல்களை வெளியிட்டுள்ளது.
மத்திய ஆசியாவிலிருந்து வலசை வரும் பட்டைத்தலை வாத்து உள்பட 187 பறவைகள், தாவரங்கள், பூச்சிகள் உள்ளிட்டவை எலத்தூரில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் நாகமலைக் குன்றில் 126 பறவைகள், 138 தாவர இனங்கள் உள்ளிட்டவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வளவு சிறப்புகள் நிறைந்த இந்த இயற்கைப் புகலிடங்களைக் கட்டாயம் காப்பாற்ற வேண்டுமென இந்த நூல்களைப் பார்த்தவுடன் சட்டெனத் தோன்றிவிடுகிறது.
ஈரோடு எலத்தூர் குளம் / ஈரோடு நாகமலைக் குன்று - இரண்டு நூல்கள், சூழல் அறிவோம், தொடர்புக்கு: suzhalarivom@gmail.com
- அன்பு