

பல்வேறு கற்பிதங்களால் சூழப்பட்ட உயிரினம் ஒன்று பூவுலகில் உண்டென்றால், அது பாம்புகள்தான். மனிதர்களின் பொது மூதாதை/குரங்குகள் ஆகியவற்றுக்கான எதிரியாகப் பாம்பு இருந்தது, அதன் மீது இன்றுவரை சுமத்தப்பட்டுவரும் தவறான கருத்துகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால், அறிவியல் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் அதுபோன்ற தவறான கருத்துகளை வேகமாகக் களைந்தாக வேண்டும். மனிதர்-உயிரின எதிர்கொள்ளலில் இப்போது பாலூட்டிகள் அதிகமும் சர்ச்சைக்கு உள்ளாகின்றன. காலங்காலமாக மனிதர்-உயிரின எதிர்கொள்ளலில் பாம்புகள் இடம்பெற்று வந்துள்ளன. பாம்பு கடித்து மனிதர்கள் பலியாவது இந்தியாவில்தான் அதிகம்.
பாம்புகளை வெறுப்பதையும், அதனால் கடிபட்டு மனிதர்கள் பலியாவதையும் தடுத்தாக வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு முதல் தேவை பாம்புகளைப் புரிந்துகொள்ளுதல், இதற்கான அறிமுகமாக கோவை சதாசிவம் இந்த நூலை எழுதியுள்ளார். அவற்றின் வரலாறு, பண்பாட்டுப் பிரதிபலிப்பு, உணவு, இனப்பெருக்கம், உணவு வலையில் அவற்றின் பங்களிப்பு போன்ற தகவல்களைத் தந்துள்ளார்.
‘பாம்புக் காது’ என்கிறோம், உண்மையில் பாம்புக்குக் காது கிடையாது. பிளவுபட்ட நாக்கை நீட்டி நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளைக் கொண்டே சுற்றுப்புறத்தை அது அறியும். அதேபோல் அது தனது தோலை உரிப்பதாகத் தவறாகச் சிலர் எழுதுகிறார்கள். பாம்பு தோலை உரிப் பதில்லை, சட்டையையே உரிக்கிறது. இது புதிதாக வளரக்கூடிய புறக்கவசம். இதுபோன்ற பல தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
பாம்புகள்
பூவுலகின் தொல்லுயிர்,
கோவை சதாசிவம்,
குறிஞ்சி பதிப்பகம்,
தொடர்புக்கு: 99650 75221