

உ
லக சுற்றுச்சூழல் நாள் நிறைவடைந்துள்ள நிலையில், சுற்றுச்சூழலைப் பற்றிய புரிதலை அதிகப்படுத்திக்கொள்ள புத்தகங்கள் உதவும். அந்த வகையில் சமீபத்தில் வெளியான மூன்று புத்தகங்கள்:
உயிர் இனிது | கோவை சதாசிவம்
பூச்சிகள், பறவைகள் பற்றி தொடர்ச்சியாக புத்தகங்கள், குறும்படங்கள் எடுத்துவரும் எழுத்தாளர் கோவை சதாசிவத்தின் புதிய நூல் இது. நம் சுற்றுச்சூழலின் பெருமைகளான குறிஞ்சி, செங்காந்தள், செங்கால் நாரை, வரையாடு, தேவாங்கு, ஓங்கில், நட்சத்திர ஆமை உள்பட பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள், இயற்கை அம்சங்கள் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிமுகப்படுத்தும் 40-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பு. சுற்றுச்சூழல் குறித்த அடிப்படை அறிவைப் பெற இக்கட்டுரைகள் உதவும்.
வெளியீடு: குறிஞ்சி பதிப்பகம், தொடர்புக்கு: 99650 75221
இந்திய சூழ்நிலையில் புவி வெப்பமடைதல் | நாக்ராஜ் ஆத்வே
ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வரும் புவி வெப்பமடைதல், அதன் விளைவாக பருவநிலையில் ஏற்படும் மாற்றங்கள், பிரச்சினைகள் குறித்து இந்தியாவும் தமிழகமும் இன்னும் விழித்துக்கொள்ளவில்லை. உலகை ஆட்டுவிக்கப்போகும் இந்தப் பெரும் சுற்றுச்சூழல் பிரச்சினை பற்றிய அறிவியல் புரிதல் பரவலாகாத நிலையில், அது பற்றிய அறிமுகத்தைத் தருகிறது இந்த நூல். புவி வெப்பமடைதல் பிரச்சினைக்கு நேரடிக் காரணமில்லாதவர்களே இதனால் பெரும் பாதிப்பை சந்திக்கப் போகிறார்கள் என்பதை நூல் தெளிவுபடுத்துகிறது. இந்தக் குறுநூலை மணி, சாரு ரவிச்சந்திரன் தமிழில் மொழிபெயர்த் துள்ளனர்.
வெளியீடு: விடியல் பதிப்பகம், தொடர்புக்கு: 94434 68758
இனயம் துறைமுகம் | கிறிஸ்டோபர் ஆன்றணி
வளர்ச்சி என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் - கார்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக இயற்கை வளங்களை அரசு தாரை வார்ப்பதற்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. அந்த வகையில் தென் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ள இனயம் துறைமுகம் பற்றி இந்த நூல் ஆராய்கிறது. இந்தப் புதிய துறைமுகத் திட்டம் அப்பகுதி பூர்வகுடி மக்களின் வாழ்க்கையை எப்படிச் சீரழிக்கும் என்பதைப் பற்றிப் பேசுகிறது.
வெளியீடு: எதிர் வெளியீடு,தொடர்புக்கு: 99425 11302