தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 89: மண்புழு உரம் - கவனம் தேவைப்படுபவை

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 89: மண்புழு உரம் - கவனம் தேவைப்படுபவை
Updated on
1 min read

ண்புழு உரம் தயாரிக்கும்போது மேலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பயிர் தூர், களைகள், வைக்கோல், உமி, எரு, தாவரத் தண்டுகள், இலைகள், பழத்தோல்கள், கழிவுப் பழங்கள், முளைக்காத விதைகள், கால்நடைகளின் கழிவுகளான சாணம், மூத்திரம், சாண எரிவாயுக் கழிவு, தோல், ஓடு, பயன்படுத்தப்படாத குழம்பு, காய்கறிகள், சமையல் எண்ணெய் ஆலைகளில் கிடைக்கும் விதை ஓடு, பிரஸ்மட், வடிப்பாலைகளில் கிடைக்கும் கழிவு, தென்னை நார்க் கழிவு போன்ற அனைத்தையும் மண்புழு உரத்துக்கான மூலப்பொருட்களாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மண்புழு உரம் உற்பத்தி செய்யப்படும் இடம் நிழலுடன் அதிக அளவு ஈரப்பதம் கொண்ட, குளிர்ச்சியான பகுதியாக இருக்க வேண்டும். தொழுவங்கள், கீற்றுக்கொட்டகை, கட்டிடங்களை இதற்குப் பயன்படுத்தலாம். திறந்தவெளியில் உற்பத்தி செய்வதாக இருந்தால், மர நிழல் உள்ள இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒரு சிமெண்ட் தொட்டி கட்டுவதாக இருந்தால், உயரம் இரண்டு அடி, அகலம் மூன்று அடி இருக்க வேண்டும். அறையின் அளவைப் பொறுத்து நீளமானது எந்த அளவு வேண்டுமானாலும் இருக்கலாம். தொட்டி அடிப்பகுதி, சாய்வான வடிவம் போன்று கட்டப்பட வேண்டும். அதிக அளவு தண்ணீரை வடிகட்டுவதற்காக மண்புழு உரத்துக்கான அமைப்பிலிருந்து ஒரு சிறிய சேமிப்புக் குழி அவசியம். இந்த முறையில் சரியான அளவில் ஈரப்பதத்தைப் பராமரிக்க முடியும். இதனால் தேவையற்ற நீர் வெளியேறாது.

நெல், உமி, தென்னை நார்க்கழிவு, கரும்புத் தோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செ.மீ. உயரத்துக்குப் பரப்ப வேண்டும். இந்தப் படுகையின் மேல் ஆற்று மணலை 3 செ.மீ. உயரத்துக்குத் தூவ வேண்டும். பிறகு 3 செ.மீ. உயரத்துக்குத் தோட்டக்கால் மண் பரப்ப வேண்டும். இதற்கு மேல் தண்ணீரைத் தெளிக்க வேண்டும்.

தினமும் தண்ணீர் தெளிப்பது அவசியம், 60 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். தேவையானபோது தண்ணீரைத் தெளிக்க வேண்டும், ஊற்றக் கூடாது. உரம் சேகரிப்பதற்கு முன்பு தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட வேண்டும்.

அசிட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் போன்ற உயிர் உரங்கள் மூலம் மண்புழு உரத்தை ஊட்டமேற்றலாம். ஊட்டமேற்றுதல் மூலம் பயிர்ச்சத்துகள், உயிர்ச்சத்துகள் அதிகரிக்கின்றன. மேலும் நன்மை தரும் உயிரினங்கள் ஊட்டமேற்றிய மண்புழு உரத்தில் அதிகரிக்கின்றன. ஒரு டன் கழிவுக்கு ஒரு கிலோ அசோபாஸ் (அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ - பாக்டீரியா) என்ற அளவில் இருபது நாட்களுக்குப் பின் மண்புழுப் படுகையில் சேர்க்கலாம்.

தண்ணீர் தெளிப்பதை நிறுத்தியவுடன், மண்புழுக்கள் படுகையின் அடியில் சென்றுவிடும். மேலே உள்ள உரத்தை எடுத்துவிட்டு மண்புழுக்களைப் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். புழுக்களுடன் சிறிது சாணம் இருப்பது நல்லது.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in