

க
ணுக்காலிகள் ஆய்வில் புதிய வரவு… பிளிஸ்டகேந்தா கண்ணு! இந்த அரிய, புதிய வகை ஆழ்கடல் சிலந்தி நண்டு, சிதம்பரத்துக்கு அருகில் உள்ள பரங்கிப்பேட்டை தென்கிழக்கு இந்திய வங்காள விரிகுடா பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.
உயிரினங்களில் மிகப் பெரிய பிரிவுகளில் ஒன்றான கணுக்காலிகளின் வம்சத்தில் உலகம் முழுவதும் இருந்து, இதுவரையில் கிட்டத்தட்ட 700- க்கும் மேற்பட்ட நண்டு வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 10 நண்டு வகை உண்பதற்கு ஏற்றவாறும் ஊட்டச்சத்து மிகுந்தவையாகவும் விளங்குவதோடு, மீன்வளப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பவையாகவும் உள்ளன.
ஆழ்கடல் சிலந்தி வகை நண்டுகளான பிளிஸ்டகேந்தா என்ற பேரினத்தில் பிளிஸ்டகேந்தா ஓரி (பி. ஓரி), பிளிஸ்டகேந்தா மோல்லியி (பி. மோல்லியி), பிளிஸ்டகேந்தா புன்ஜென்ஸ் (பி. புன்ஜென்ஸ்) என்ற மூன்று வகைகள் சார்ந்த ஆழ்கடல் சிலந்தி வகை நண்டுகள் தென் ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், மியான்மர் போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன. நான்காவதாகத் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை சிலந்தி நண்டும் பிளிஸ்டகேந்தா வகையைச் சார்ந்ததாக உள்ளது.
இந்த வகை அரிய நண்டுக்கு, கணுக்காலிகள் ஆய்வில் வல்லுநரான அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் உயிரியல் உயராய்வு மைய முன்னாள் இயக்குநர் காலஞ் சென்ற பேராசிரியர் முனைவர் கண்ணுப்பாண்டி அவர்களின் நினைவாக பிளிஸ்டகேந்தா கண்ணு என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வகை நண்டை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவி பிரேமா, பேராசியர் முனைவர் சமுத்திர பாண்டியன் ரவிச்சந்திரன், கேரளப் பல்கலைக்கழக ஆய்வாளர் முனைவர் ரவினேஷ், முனைவர் பிஜுகுமார் ஆகியோர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பீட்டா உங் உடன் இணைந்து கண்டறிந்துள்ளனர்.
பிளிஸ்டகேந்தா வகை நண்டுகள் சுமார் 300 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் ஆக்ஸிஜன் குறைவான பகுதியில் வாழும் தகவமைப்பைப் பெற்றுள்ளன. இந்த வகை நண்டுகள், வாழ்வின் பெரும்பகுதியை உணவுத் தேடலுக்காக மட்டுமே செலவழிக்கின்றன. ஏனென்றால் இவற்றால் நீந்திச் செல்ல இயலாது. கடலின் அடிப்பரப்பில் மெதுவாக நடந்து செல்வதற்கும், பாறைகளை இறுக்கமாகப் பற்றிக்கொள்வதற்கும் ஏற்றாற்போன்ற நீண்ட கால்களையும் கூரிய நகங்களையும் இவை பெற்றுள்ளன. மக்கிய தாவரங்கள், பாசி போன்றவையே இவற்றின் முக்கிய உணவு.
இனப்பெருக்கக் காலத்தில் இடப்பெயரும் இந்த நண்டுகள், இடப்பெயர்ச்சியின்போது மீனவர்களின் வலைகளில் எதிர்பாராமல் சிக்கிக்கொள்கின்றன. அதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. சுற்றுச்சூழல் சமநிலையைத் தக்கவைப்பதற்கு உதவும் இதுபோன்ற உயிரினங்களை நாம் பாதுகாக்க வேண்டும். தொடர்ந்த ஆய்வுகளின் மூலமே, அந்தப் பணியைச் செய்ய முடியும். அந்த ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான ஆதரவை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.