தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 85: கண்ணில்லாமல் பார்க்கும்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 85: கண்ணில்லாமல் பார்க்கும்
Updated on
1 min read

பு

ழுக்கள் முதுகெலும்பில்லாத உயிரினக் குடும்பத்தைச் சேர்ந்தவை. மண்புழுக்களும் அந்தப் பிரிவைச் சேர்ந்தவையே. இவை குளிர் ரத்த உயிரினங்கள். அதாவது சுற்றுப்புறத்தின் வெப்பநிலைக்கு ஏற்ப தமது உடல் வெப்பத்தை மாற்றியமைக்கும் தன்மை கொண்டவை.

மண்புழுக்களில் 2,700 வகை உள்ளதாகக் கூறுகின்றனர். உலகின் எல்லாப் பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. வெப்பமண்டலங்களிலும், குளிர்நாடுகளிலும்கூட இவை வாழ்கின்றன. சுமார் ஒரு அடி நீளத்துக்கும் குறைவான வகைகளும் 12 அடி நீளம் உள்ளதாகவும்கூட இவை கண்டறியப்பட்டுள்ளன. அதிக நீளம் கொண்ட ஓரிகான் ஜெயண்ட் என்ற வகை வட அமெரிக்காவில் உள்ளதாக தகவல் உண்டு.

மண்புழுக்களுக்கு கண்களோ, காதுகளோ, மூக்கோ கிடையாது. எளிய மூளையாலும் நரம்பு அமைப்பாலும் ஒளியையும் சிறு அசைவையும்கூட அவற்றால் கண்டறிய முடிகிறது. நரம்பு அமைப்புகள் வழியாக மண்புழுக்கள் மண்ணில் தமது வழியைக் கண்டறிகின்றன.

நாம் இழந்த உயிர்களில் மண்புழு மிக முதன்மையானது. இது உழவனின் நண்பன் மட்டுமல்ல. இதுதான் உண்மையான உழவன். வாழ்நாள் முழுவதும் உழுதுகொண்டே இருக்கிறது. தனது எடைக்குச் சமமான கழிவைத் தின்று அதற்குச் சமமான எருவை நிலத்துக்குக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

மண்புழுவின் எருவில், பிற இயற்கை எருக்களைவிட பல மடங்கு தழைச்சத்து, சாம்பல்சத்து, மணிச்சத்து, பல நுண்ணூட்டங்கள் உள்ளன. ஒரு சதுர அடியில் 3 மண்புழுக்கள் இருந்தால் நிலம் நல்ல நிலைக்கு வந்துவிட்டது என்று பொருள். மண்புழுக்கள் அழிந்துபோன நிலையில் அவற்றை மீட்டெடுத்து மீண்டும் நமது நிலத்தில் நடமாட வைக்க முடியும்.

பண்டைக் காலத்தில் நமது முன்னோர்கள் இயற்கை வேளாண்மையைப் பயன்படுத்தி அதிக விளைச்சல், நஞ்சில்லா உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தனர். அதேநேரம் நிலத்தின் வளமும் அதிகரித்தது. ஆனால் பசுமைப் புரட்சியின் விளைவாக வேதி உப்புக்களும் பூச்சிகொல்லிகளும் பயன்படுத்தப்பட்டன. இதனால் நிலங்கள் சீர்கெட்டதுடன் மண்புழுக்களும் மற்ற நுண்ணுயிரிகளும் அழிந்தன.

மண்புழுக்கள் அழிந்ததால் மழைநீர் மண்ணுக்குள் செல்வது தடைபட்டது. மண்ணில் காற்றோட்டம் குறைந்தது. உணவுப்பொருட்கள் நஞ்சாக மாறின. இதனால் பல்வேறு நோய்கள் பரவ ஏதுவாகிவிட்டது.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in