

ஒ
ருமுறை ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் பறவைகள் சரணாலயத்தில் நீர்ப் பறவைகளைப் படமெடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று என்னை நோக்கி ஏதோ ஓர் உயிரினம் ஓடி வந்ததை உணர முடிந்தது. சத்தம் கேட்டுத் திரும்பிபோது, அது ஓர் உடும்பு என்று தெரிந்தது. அது ஏன் இவ்வளவு அரக்கப்பரக்க ஓடுகிறது என்று கவனித்தால், இரண்டு கிளிகள் அதை விரட்டி விரட்டித் தாக்கிக்கொண்டிருந்தன.
உடும்பின் வாலை, அந்தக் கிளிகள் கொத்த முயன்றுகொண்டிருந்தன. பொதுவாக, உடும்பு போன்ற பல்லி இனங்கள் சுறுசுறுப்பாக இருக்காது. கிளிகளும் அமைதியானவை. அவை அமைதியிழந்து இப்படிச் சண்டையிடுகின்றன என்றால், அவற்றின் முட்டைகளைத் திருட உடும்பு முயன்றது ஒரு காரணமாக இருக்கலாம்.
நமக்கு நன்கு பரிச்சயமான பறவைகளுள் ஒன்று பச்சைக்கிளி. ஆங்கிலத்தில் ‘ரோஸ் ரிங்டு பாராகீட்’. இந்த வகையில் ஆண் கிளிகளுக்கு மட்டுமே கழுத்தைச் சுற்றி இளஞ்சிவப்பு ஆரம் இருக்கும். அதனால்தான் ‘ரோஸ் ரிங்டு’ என்ற பெயர் ஒட்டிக்கொண்டது.
சிட்டுக்குருவிகளுக்கு அடுத்தபடியாக நகரங்களில் உள்ள பூங்காக்களிலும் கிராமத்துத் தோப்புகளிலும் அதிகம் தென்படுகிற பறவை இது. எப்போதும் கூட்டமாகத் திரியும் இவை, இரவிலும் ஓய்வாக இருக்கும் நேரத்திலும்கூட ‘கீ கீ’ சத்தமிட்டுக்கொண்டே இருக்கும்.
தாம் உண்டு, தம் வேலை உண்டு என்று இருக்கிற அமைதியான பறவைகள் இவை. மரப் பொந்துகளில் முட்டையிடும் தன்மை கொண்டவை. ஆண், பெண் இரண்டு பாலினங்களுமே தங்கள் குஞ்சுகளைப் பாதுகாக்கும்.
இந்தப் பின்னணியில் கோபக்காரக் கிளிகளை நான் பார்த்தது, அதுதான் முதன்முறை. ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அந்த நிமிடங்கள்தாம் இங்கு இடம்பெற்றிருக்கும் ஒளிப்படங்கள். தங்கள் வாரிசுகளைப் பாதுகாக்கும் உணர்வு மனிதர்களுக்கு மட்டும்தான் உண்டா என்ன?
கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com