

ஆங்கிலத்தில் ‘லயன் டெய்ல்ட் மக்காவூ’ என்று அழைக்கப்படும் இந்தக் குரங்குகளின் தமிழ்ப் பெயர், சிங்கவால் குரங்குகள். சிங்கத்தைப் போன்று, இந்தக் குரங்குக்கும் வால் இருப்பதால் அதற்கு இந்தப் பெயர். தமிழகத்தில் இதை கறுங்குரங்கு என்றும் அழைக்கிறார்கள்.
எண்ணிக்கை குறைவாக உள்ள இந்தக் குரங்கினம், இந்தியாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் பகுதிகளில் மட்டுமே காணப்படும் ஓரிட வாழ்வி (எண்டமிக்) ஆகும். அதிலும், தென்னிந்தியப் பகுதிகளில் உள்ள காடுகளில் மட்டுமே இந்தக் குரங்கைக் காண முடியும். மரத்தின் உச்சிகளில்தான் இவை குடிகொண்டிருக்கும்.
மொத்தமே சுமார் 4 ஆயிரம் எண்ணிக்கையில்தான் இந்தக் குரங்கள் உள்ளன. இந்த அளவுக்கு அதன் எண்ணிக்கை குறைந்து போனதற்குக் காரணம், காடுகளிலும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள்தான். தவிர, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்தக் குரங்கு, இனப்பெருக்கம் செய்யும். இந்தக் குரங்கு இனத்தில், ஆண் குரங்குகளைவிட பெண் குரங்குகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. ஆனாலும், முழுமையாக வளர்ச்சியடைந்த பெண் குரங்கால் மட்டுமே ஆரோக்கியமான குட்டிகளை ஈன்றெடுக்க முடியும். இதனால், அவற்றிடையே பிறப்பு சதவீதம் குறைவாக இருக்கிறது.
பொதுவாக, மழைக் காடுகளில் பெருமளவில் தென்படும் இந்தக் குரங்குகள், சில சமயம் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்துள்ள வால்பாறை போன்ற பகுதிகளிலும் தென்படும். அங்குதான் இந்தக் குரங்குகளை ஒளிப்படம் எடுத்தேன்.
என்ன சுவாரஸ்யம் என்றால், இந்தக் குரங்குகள் எப்போதும் குழுவாகத்தான் இருக்கும். அதனால் தனி ஒரு குரங்கை பார்ப்பது மிகவும் சிரமம். வால்பாறையில் இரண்டு குரங்குக் குழுக்கள் உள்ளன. அவை சாலையைப் பாதுகாப்பாகக் கடப்பதை உறுதி செய்ய வனத்துறைக் காவலர்கள் பாடுபடுகிறார்கள்.
நினைவாற்றல் அதிகமுள்ள இந்தக் குரங்குகள், சுமார் 17 விதமான ஒலிகளை எழுப்பி, ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும் திறன் படைத்தவை!
கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com