

கா
ய்கறிச் சந்தைகளில் நாள்தோறும் குவியும் கழிவை அகற்றி, அவற்றில் இருந்து உயிரி எரிவாயு தயாரிப்புப் பணியில் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தி.நகர் ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள ரங்கநாதன் தெருவில் காய்கறிச் சந்தை இயங்கிவருகிறது. மாநகரின் மையப் பகுதியான இங்கு நாள்தோறும் குவியும் காய்கறிக் கழிவு, அப்பகுதி சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த அப்பகுதியில் சந்தைக் கழிவை உடனுக்குடன் அகற்றாவிட்டால் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவதோடு, மக்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்தும் உள்ளது.
இதற்குத் தீர்வு காண, ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷாசன் ஜெயின் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் சிலர் முன்வந்துள்ளனர். இந்தச் சந்தைக் கழிவுகளை உயிரி எரிவாயுவாக மாற்றுவதற்காக ‘நிர்மான்’ எனும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் பேராசிரியை சுந்தரமீனா செந்தில், எபினேசர், ஜி.கே.லாவண்யா ஆகியோரின் மேற்பார்வையில் உயிரி எரிவாயு தயாரிக்கும் பிரிவு ஒன்றை, கல்லூரி வளாகத்தில் மாணவிகள் நிறுவியுள்ளனர். இந்த அலகில், 50 கிலோ அளவிலான மறுசுழற்சிக்கு ஏற்ற காய்கறிக் கழிவைச் செலுத்தி, இரண்டு கிலோ அளவிலான உயிரி எரிவாயுவை உற்பத்தி செய்ய முடியும். அப்போது கிடைக்கும் கழிவுக் கலவையை உரமாகப் பயன்படுத்த முடியும்.
முற்றிலும் கார்பன் உமிழ்தலே இல்லாத உயிரி எரிவாயுவை எரிபொருளாகப் பயன்படுத்துவதன் மூலம் நூறு சதவீதம் பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்க முடியும். இதன்மூலம் சுத்தமான சுற்றுச்சூழலும் பசுமையும் நிறைந்த இந்தியாவை உருவாக்குவதே இந்த முயற்சியின் குறிக்கோள் என்று மாணவிகள் தெரிவித்தனர்.
இதற்காக, காய்கறிச் சந்தைகளில் குவியும் கழிவைத் திரட்டி வருவதற்காக ஒருவர், உரங்களைப் பண்ணைகளுக்குக் கொண்டுசென்று விற்க ஒருவர் என இரண்டு பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது திருப்தி அளிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.