

த
ன்னைப் பார்ப்பவரிடமெல்லாம் தனியானதொரு தாக்கத்தை நிலையாக ஏற்படுத்திய ம.இலெ.தங்கப்பா, பன்முகத்தன்மையும் பல்திறனும் கொண்ட படைப்பாளி. அடிப்படையில் இயற்கையை ஆராதிக்கும் இலக்கியவாதியாகத்தான் அவர் திகழ்ந்தார்.
குழந்தைகள் இயற்கையை நேசிக்கவும் ஆராதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் பெரிதும் விரும்பியதால், இயற்கையின் அற்புதங்கள் பற்றிய புத்தகங்களைக் குழந்தைகளுக்காக அவர் எழுதினார். இளைய சமுதாயத்தைத் தட்டி எழுப்பாவிட்டால் , தன்னை எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய அழிவிலிருந்து இயற்கை தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.
இயற்கை எழுப்பும் ஒலிகளையும், அது தரும் காட்சிகளையும் கண்டு கேட்டுக் கவனித்து ரசித்துக் களிப்புற வேண்டும் என்று விரும்பினார். இலக்கிய உலகிலிருந்து இயற்கையைக் காப்பாற்றும் செயற்பாட்டாளர் என்ற நிலைக்கு களத்தேவையின் காரணமாக, அவரால் எளிதாக அடியெடுத்து வைக்க முடிந்தது.
புதுச்சேரி இயற்கைக் கழகத்தின் உயிரோட்டமாக அவர் திகழ்ந்தார். இயற்கையைப் பாதுகாக்கும் பல செயல்களில் இக்கழகம் ஈடுபட்டது. இயற்கையைப் பாதுகாக்கும் அம்சங்கள் குறித்துப் பல துண்டறிக்கைகளை எழுதி அச்சிட்டு, புதுச்சேரி முழுதும் வழங்கி வந்தார். இக்கழகத்தின் உறுப்பினர்களால் வீதி நாடகங்கள் எழுதி இயக்கி நடிக்கப்பட்டு, அதன்மூலம் இயற்கையைப் பாதுகாக்கும் செய்திகள் மக்களுக்கு விரைந்து எடுத்துச் செல்லப்பட்டன.
புதுச்சேரி நிலப்பரப்புடன் ஒன்றிணைந்த பறவைகளின் வாழ்வு பற்றியும் மதிப்புமிக்க சதுப்புநிலக் காடுகளின் சூழல் அமைப்பு பற்றியும் நிறைய கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். மக்களின் வாழ்வும் வாழ்வாதாரங்களும் நீடித்திட இயற்கைச் சூழல் அமைப்பு முறை எவ்வளவு இன்றியமையாத ஒன்று என்பதை மக்கள் உணர வேண்டும் என அவர் விரும்பினார்.
மனிதனின் புறவாழ்வுக்கான வசதிகளுடன் உள்ஒளிக்கான அடிப்படையை இயற்கை எவ்வாறு வழங்குகிறது என்ற உண்மையை அனைவருக்கும் கொண்டு செல்வதைத் தன் வாழ்நாள் கடமையாக அவர் கொண்டிருந்தார். மனிதச் சமூகங்களுக்குள் இயற்கை எவ்வாறு சமூகச் சமநீதியை நிலைநாட்டுகிறது என்பதை நன்றாக அறிந்து வைத்திருந்த அவர், இதை அனைவருக்கும் எடுத்துச் செல்லும் பணியில் தன் வாழ்க்கை முழுதும் அயராது ஈடுபட்டார்.
மிகப்பெரிய அழிவுகளை நாம் சந்தித்த போதும் தங்கப்பா தன் மனஉறுதியை இழக்காததுடன் இயற்கையைக் காக்கும் முயற்சியிலிருந்தும் ஒருபோதும் அவர் பின்வாங்கியதில்லை. அவரது நெஞ்சில் இயற்கையின் கீதமும் புன்னகையில் சூழலின் நடனமும் என்றும் இருந்தன. அவ்வாறே என்றும் அவர் நினைவுகூரப்படுவார். இயற்கையைக் காக்க எண்ணத்திலும் செயலிலும் நாம் தொடர்ந்து எடுக்கும் உறுதியான நிலைப்பாடே, தங்கப்பா என்னும் மாமனிதருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக அமையும்.
கட்டுரையாளர், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: senthamilkannu@gmail.com