

த
வளைகள் சூழலியல் நலம்காட்டிகள் என்று அறியப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பல அரிய தவளை வகைகள் சமீபகாலமாக பூஞ்சான் நோய்களுக்குப் பலியாகி வருகின்றன.
இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் கணக்கிட முடியாத தாவரங்கள், உயிரினங்களுக்கு வாழிடமாகவும் பல ஆறுகளின் மூலாதாரமாகவும் உள்ளன. உலகில், உயிரினப் பன்மை மிகுந்திருக்கும் அரிய சில பகுதிகளில் இதுவும் ஒன்று.
இங்குதான் மிகவும் அச்சுறுத்தப்பட்ட, அழியும் தருவாயில் உள்ள பல தவளை இனங்கள் வாழ்கின்றன. அழிந்துவரும் ஆற்றுப் படுகைகள், புவி வெப்பமாதல், வரைமுறையற்ற நன்னீர் பயன்பாடு, சூழலியல் மாசுபாடு ஆகியவையே தவளைகள் அழிவுக்குக் காரணிகள் என முன்பு கருதப்பட்டன. ஆனால் பூஞ்சான் மூலம் பரவும் நோய்களால் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பல அரிய வகைத் தவளைகள் பெரும் அழிவைச் சந்தித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
மேலை நாடுகளைப் போல் குறிப்பிட்ட சில பூஞ்சான் வகைகள் பற்றியும், தவளைகள் மீது அவை பரப்பும் நோய்களைப் பற்றியும் தகவல்கள் நம் நாட்டில் அதிகமில்லை. சமீபகாலமாக ‘கைட்ரிடு’ எனும் பூஞ்சான், தவளைகளைத் தாக்கி வருகிறது. அந்த நோயை ‘கைட்ரிடியோமைகோசிஸ்’ (Chytridiomycosis) என்று அழைக்கிறார்கள்.
இந்தப் பூஞ்சான் நீர்வாழ் தவளைகளின் தோலில் வளர்கிறது. இதனால் அவற்றின் உடலில் இருக்கும் ஈரத்தன்மையில் சமமற்ற நிலை ஏற்படுகிறது. எனவே, உடலுக்குள் உதிரப்போக்கு ஏற்பட்டு, மாரடைப்பால் தவளைகள் இறக்கின்றன.
இப்படி ஒரு நோய், முதன்முதலில் பனாமாவில் உள்ள தவளைகளிடம் காணப்படுவதாக 1997-ல் அறிவிக்கப்பட்டது. இந்த நோய் தவளைகளை மட்டுமல்லாது, சுமார் 200-க்கும் மேற்பட்ட இதர உயிரினங்களையும் அச்சுறுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-ல் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இந்த நோய்க்கான அறிகுறி உள்ளதாகத் தெரியப்படுத்தியது. இந்த நோய் உருவாவதற்கு, நீர் மாசுபாடுதான் முக்கியக் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். தவிர, நீர் மூலமாகத்தான் இந்த நோய் இதர தவளைகளுக்குப் பரவவும் செய்கிறது என்கிறார்கள்.
தவளைகள், செசிலியன்கள், சாலமண்டார்கள் ஆகிய மூன்றுமே குளிர்ரத்த முதுகெலும்புள்ள உயிரினங்கள். மனிதர்களைப் போல, உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் முறை இவற்றிடம் இல்லை. அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பத் தங்களின் இருப்பிடத்தை (நிலம் அல்லது நீர்) மாற்றிக்கொள்வதன் மூலம், அவை தங்கள் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கின்றன.
அவற்றின் உடல் அமைப்புகளின் மிக முக்கியச் செயல்பாடு, நீரில் உள்ள கனிமத் தாதுக்களைப் பயன்படுத்தி உடலைப் பராமரிப்பதுதான். அவற்றின் உடல் வளர்ச்சி, வளர்சிதை மாற்றத்தில் அவை வசிக்கும் நீர்நிலையும் முக்கியப் பங்காற்றுகிறது. தவளைகளின் இருப்பிடச் சூழலில், கனிமக் கலவைகளில் சிறிய மாற்றம் ஏற்பட்டால்கூட அவை மரணத்தைச் சந்திக்கும். எனவேதான், தவளைகளைச் சூழலியல் சுகாதாரக் குறியீடுகளாக (என்விரான்மென்டல் இண்டிகேட்டர்ஸ்) கருதப்படுகின்றன.
மலேரியா நோய்க்குக் கொசு ஒரு கடத்தியாக இருக்கிறது. அது போல இந்தப் பூஞ்சான் பரவ, ஆப்பிரிக்கத் தவளை (ஸெனோபஸ் லெவிஸ்), சுமார் 20 ஆயிரம் முட்டைகளை ஒரே நேரத்தில் இடக்கூடிய அமெரிக்கப் பெரிய தவளை (லித்தோபேட்ஸ் கேட்ஸ்பியன்ஸ்) ஆகியவை இந்தப் பூஞ்சானின் கடத்திகளாக உள்ளன.
இந்தத் தவளை வகைகள் பூஞ்சானுக்கு எதிராகப் போராடும் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கொண்டிருந்தாலும், மீன்பிடித் தொழிலுக்காகப் பல நாடுகளுக்கும் அதிக அளவில் அவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதர நாடுகளில் உள்ள தவளைகளுக்கு இந்தப் பூஞ்சான் நோய் பரவ, இது ஒரு முக்கியக் காரணமாகிவிட்டது. கடந்த 2013 - 2015 ஆண்டுகளில் இந்தப் பூஞ்சானின் தாக்கம் பற்றித் தெரிந்துகொள்ள தமிழ்நாடு,கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களின் சில காடுகளில் ஆய்வுகளை மேற்கொண்ட குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். தொடர்ச்சியான சோதனைக்குப் பிறகு, தமிழக, கேரள பகுதியைச் சார்ந்த தவளை இனங்களை இந்தப் பூஞ்சான் தாக்கி இருப்பது தெரியவந்தது.
நம் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படும் உயிரினங்களைக் கடுமையான நோய்ப் பரிசோதனைகளுக்கு உட்படுத்திய பிறகே, அவற்றை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். காட்டுயிர்களுக்கு ஏற்படும் நோய்களைக் கண்டறிய, தடுக்க இன்னும் சிறப்பான மருத்துவக் கருவிகளையும் ஆய்வகங்களையும் அதிக அளவில் உருவாக்க வேண்டும். காட்டுப் பகுதிக்குள் எங்கேயாவது கூட்டம் கூட்டமாகத் தவளைகள் இறந்து கிடப்பதைக் காண நேர்ந்தால், உடனடியாக வனத்துறைக்கோ வன ஆய்வாளர்களுக்கோ தெரியப்படுத்த வேண்டும். அதன் மீது உடனடியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளே, இந்தப் பூஞ்சான் நோய் கூடுதலாகப் பரவுவதைத் தடுக்கும்!
கட்டுரையாளர்,
சுற்றுச்சூழல் ஆய்வு மாணவர்
தொடர்புக்கு: brawinkumarwildlife@gmail.com